சுவிட்சர்லாந்தில் நிலவும் கடும் வெப்ப அலை காரணமாக, நாட்டின் உயரமான மலைப்பகுதிகளில்கூட புதிய வெப்பநிலை சாதனைகள் பதிவாகியுள்ளன. ஜுங்ஃப்ராயோக் (Jungfraujoch), சாண்டிஸ் (Säntis), கிரேட் செயின்ட் பெர்னார்ட் கணவாய் (Great St Bernard Pass) மற்றும் கிரிம்செல் கணவாய் (Grimsel Pass) ஆகிய இடங்களில் திங்கட்கிழமை புதிய தினசரி வெப்பநிலை உச்சங்கள் பதிவானதாக MeteoSwiss தெரிவித்துள்ளது.
வாலிஸ் மாகாணத்தில் கடல் மட்டத்திலிருந்து 3,571 மீட்டர் உயரத்தில் உள்ள ஜுங்ஃப்ராயோக்கில் வெப்பநிலை 8°C ஆக உயர்ந்தது. இதற்கு முன் 2009 ஆம் ஆண்டு பதிவான 7.8°C சாதனை முறியடிக்கப்பட்டது.
2,501 மீட்டர் உயரத்தில் உள்ள சாண்டிஸ் மலைப்பகுதியில் 16.3°C பதிவாகி, 1949 ஆம் ஆண்டு பதிவான 16.2°C சாதனையை கடந்தது.
2,472 மீட்டர் உயரத்தில் உள்ள கிரேட் செயின்ட் பெர்னார்ட் கணவாயில் 17.3°C பதிவாகியது. இதற்கு முன் 1869 ஆம் ஆண்டு பதிவான 17.1°C தான் அதிகபட்சமாக இருந்தது.
1,980 மீட்டர் உயரத்தில் உள்ள கிரிம்செல் ஹோஸ்பிஸ் பகுதியில் வெப்பநிலை 20°C ஆக உயர்ந்தது. இது 2009 ஆம் ஆண்டின் முந்தைய சாதனையை விட 1.7°C அதிகமாகும்.
பல நகரங்களிலும் புதிய சாதனைகள்
வோட் (Vaud) மாகாணத்தின் பயேர்ன் (Payerne) பகுதியில் 32.2°C பதிவாகி புதிய சாதனை படைக்கப்பட்டது.
ஜூலை 13 ஆம் தேதிக்கான புதிய வெப்பநிலை சாதனைகள் பின்வரும் பகுதிகளிலும் பதிவாகின:
- ஆல்ட்டார்ஃப் (Altdorf) – 29.5°C
- கிரேஷென் (Grächen) – 26.7°C
- எல்ம் (Elm) – 26.6°C
- டாவோஸ் (Davos) – 25.8°C
- லா ஷோ-து-ஃபோன் (La Chaux-de-Fonds) – 28.0°C
- மெய்ரிங்கன் (Meiringen) – 29.5°C
- செயின்ட் கல்லென் (St. Gallen) – 27.3°C
காட்டுத்தீ அபாயம் அதிகரிப்பு
தற்போது சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கிராபுண்டன் (Graubünden) மற்றும் வாலிஸ் (Valais) மாகாணங்களின் சில பகுதிகளில் அபாய நிலை மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளது.
இதன் காரணமாக, நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் திறந்த வெளி தீ மூட்டுவதற்கான தடை அமலில் உள்ளது என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


