தாந்தாமலை முருகனாலயத்தில் களைகட்டி வரும் இரவுத் திருவிழாக்கள்

( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 09 ஆம் திகதி கொடியேற்றத்துடன் சிறப்பாக திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.

உற்சவகால பிரதம குரு சிவஸ்ரீ ந.பத்மநிலோஜ ஈசானசிவம் குருக்கள் மற்றும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பு.நவரூபன் குருக்கள் தலைமையில் தினமும் பகல் இரவு பூஜைகளுடன் 21 நாள் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.
தினமும் ஆயிரக்கணக்கான அடியார்கள் அங்கு விஜயம் செய்து வருகின்றனர். நீண்ட கடைத்தெரு அமைக்கப்பட்டுள்ளது. தினமும் அன்னதானம் தாராளமாக வழங்கப்படுகிறது.
இரவுத் திருவிழா நள்ளிரவு 12 மணி வரை நடைபெற்றுவருகிறது.
ஆலய  பரிபாலன சபையின் தலைவர் இ.தட்சணாமூர்த்தி செயலாளர் செ.சிறிதரன் பொருளாளர் தா.ஜெயராம் தலைமையிலான நிருவாக சபையினர் ஆலயத்தை அழகாக வடிவமைத்து பரிபாலனம் செய்து வருகின்றனர்.
தினமும் கொக்கட்டிச்சோலை பட்டிப்பளை பிரதேச சபை  தவிசாளர் எஸ்.கிரேஷகுமாரன் விஜயம் செய்து மக்கள் சார்ந்த நலன்புரி பணிகளை கண்காணித்து வருகின்றார்.
கடந்த 09 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 30 ஆம் தேதி காலை 6 மணிக்கு ஆலய வளாகத்தில் உள்ள தீர்த்தக்கேணியில் தீர்த்தம் ஆடுவதுடன் நிறைவடையவுள்ளது.