இலங்கையின் தற்போதைய இராணுவத் தளபதியின் பதவிக்காலத்தை 2028 ஜனவரி மாதம் வரை நீட்டிக்க அரசு தயாராக இருப்பதாகவும், இது கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் ஆண்டகையின் கோரிக்கையின் பேரில் நடைபெறுவதாகவும் எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் பேசிய அவர், தற்போதைய இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ சேவைக்காலம் 2026 ஜூலை 2 ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த பதவிக்கால நீட்டிப்பு காரணமாக நிலந்த பிரேமரத்ன உள்ளிட்ட பல மூத்த இராணுவ அதிகாரிகள் தங்களுக்கு உரிய பதவி உயர்வுகளையும் பதவிகளையும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், 2028 ஆம் ஆண்டில் இராணுவத் தளபதியாக நியமிக்கப்படவிருந்த ஒருவர் பதவியேற்கும் வாய்ப்பும் இந்த முடிவால் பாதிக்கப்படலாம் என அவர் குறிப்பிட்டார்.
அரசின் உயர்மட்ட நியமனங்களில் கர்தினால் மால்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு பெரும் செல்வாக்கு இருப்பதாகவும், இராணுவத் தளபதி மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) தலைவரை நியமிப்பதில் கூட அவரது கருத்தே தீர்மானமாக இருப்பதாகவும் தசநாயக்க குற்றஞ்சாட்டினார்.
அதோடு, மட்டக்களப்பு பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சொகுசு விடுதிகளில் கத்தோலிக்க குருமார்கள் தங்கியிருப்பதாகவும் அவர் மேலும் குற்றஞ்சாட்டினார்.
எனினும், இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசு, பாதுகாப்பு அமைச்சு அல்லது கொழும்பு பேராயர் அலுவலகம் இதுவரை எந்த உத்தியோகபூர்வ பதிலையும் வெளியிடவில்லை.


