கதிர்காம பாதயாத்திரை பக்தர்களுக்காக 24 மணி நேர மருத்துவ சேவை

2026 ஆம் ஆண்டுக்கான ஆடி (ஏசல) பெரஹெரா மகோற்சவத்தை முன்னிட்டு பாதயாத்திரையாக கதிர்காமம் நோக்கி வரும் பக்தர்களின் உடல்நலம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், யால வலயம்–2 இல் உள்ள லின் துண பகுதியில் 24 மணி நேர மருத்துவ சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவர்  அழகையா லதாகரன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழு தொடர்ந்து பணியாற்றி வருவதுடன், அவசர சிகிச்சை மையமும் அங்கு நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதயாத்திரை பக்தர்களுக்கு உடனடி மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன.

இந்த மருத்துவ முகாமை ருஹுணு மாகம்பத்து பிரதான சங்கநாயகர், ஹம்பாந்தோட்டை மாவட்ட சங்க சபை மற்றும் கதிர்காம சாசன பாதுகாப்பு மன்றத்தின் தலைவர், ஹெல போதுப் பல அமைப்பின் தலைவர், கதிர்காம புராதன கிரி விஹாரை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கிரிவெஹெர ராஜமகா விகாரை உள்ளிட்ட நான்கு பிரதான விகாரைகளின் அதிபருமான அத்திபூஜ்ய கொபவக தம்மிந்த நாயக்க தேரர் அவர்கள் பார்வையிட்டார்.

இதன்போது மருத்துவக் குழுவினருக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் கதிர்காம கிரிவெஹெர ராஜமகா விகாரையின் இல்லற அறங்காவலர் சசிக பம்பரெந்த, கதிர்காம பிரதேச சபைத் தலைவர் எச். எம். டி. ஹேரத், கதிரபுர ஜீப் வாகன சங்கத் தலைவர் வசந்த பிரியதர்ஷனஉள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.