( வாஸ் கூஞ்ஞ)
அகில இலங்கை மன்னார் மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் தொழிற் சங்கத்தின் தேசிய மாநாடு ஞாயிற்றுக் கிழமை (12.07) மன்னார் நகர் பிரதேச செயலகத்தின் கேட்போர்கூட மண்டபத்தில் காலை பத்து மணியளவில் நடைபெற்றது.
மன்னார் மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர் தொழிற் சங்கத் தலைவர் ஏ.சி.அஸ்லீம் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இது தொடர்பான தேசிய தொழிற்சங்க தலைவர் சுஜித் பெரேரா- தேசிய தொழிற்சங்க பொது செயலாளர் கீத்சிறி கமகே-; தேசிய தொழிற்சங்க பொருளார் ஜனாப் எம்.எம்.அன்வர்- தேசிய தொழிற்சங்க பிரதித் தலைவர் விஜித குமார கொடித்துவக்கு- மாத்தறை மாவட்ட தலைவர் கிறித் குணவர்த்தன- ஆனுராதபுர மாவட்ட தலைவர் வசந்த அனுர- இதன் அமைப்பின் அனுராதபுர மாவட்ட செயலாளர் லதித் உட்பட மன்னார் மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
அத்துடன் இக்கூட்டத்தில் அகில இலங்கை தொழிற் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத் திட்டங்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டதுடன் மன்னார் மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு நிலவி வரும் பிரச்சனைகளும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
இக்கூட்டத்தின்போது சமுர்த்தி தொழிற் சங்கத்தினால் சமுர்த்தி உத்தியோகத்தர்களின் பாடசாலை பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வாங்குவதற்காக தலா மூவாயிரம் ரூபா காசோலையாக வழங்கப்பட்டது.
இத்துடன் மன்னார் மாவட்டத்தின் சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் தொழிற் சங்கத்தின் நடப்பு வருட நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது.



