கடந்த இரண்டு ஆண்டுகளாக அரச வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்ட தரமற்ற இதய ஸ்டென்ட்கள் (Stents) மற்றும் அஞ்சியோகிராம் கத்தீட்டர்கள் (Catheters) பயன்படுத்தப்பட்டதால் நோயாளிகளுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் கடுமையான உடல்நலப் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பாக குற்றப் புலனாய்வு துறை (CID) விசாரணையை ஆரம்பித்துள்ளது.
மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர், நிபுணர் மருத்துவர் சாமல் சஞ்சீவ அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விளக்கம் கோரி, குற்றப் புலனாய்வு துறையின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
தரமற்ற மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டதால் நோயாளிகள் உயிரிழந்ததுடன், பல்வேறு பக்கவிளைவுகளுக்கும் ஆளாகியுள்ளதாக மருத்துவர் சாமல் சஞ்சீவ முன்னதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த உபகரணங்களின் பயன்பாட்டை கடந்த ஜூன் மாதம் முதல் மருத்துவப் பொருள் வழங்கல் பிரிவும் தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையமும் இடைநிறுத்தியிருந்த போதிலும், அவற்றின் இறக்குமதி நடவடிக்கைகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் ஊழல் குறித்த முழுமையான விசாரணை இதுவரை இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதற்குப் பொறுப்பான நபர்கள் மற்றும் நிறுவனங்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தேவையான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை விரைவாக சமர்ப்பிக்குமாறு CID பணிப்பாளர் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கோரியுள்ளார்.


