நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த வன்முறை மோதல்: கழிப்பறை உபகரணங்கள், தேங்காய்கள் உள்ளிட்டவை ஆயுதங்களாக பயன்படுத்தப்பட்டதாக தகவல்

: நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட கடுமையான மோதலின் போது, தாக்குதலுக்காக கழிப்பறைகளில் பொருத்தப்பட்டிருந்த கமோட் (toilet commode) உடைக்கப்பட்ட துண்டுகள், சமையலறையில் இருந்த தேங்காய்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் ஆயுதங்களாக பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவரின் தகவலின்படி, இந்த வன்முறைச் சம்பவத்தில் தொடர்புடைய கைதிகள், சிறைச்சாலை சமையலறையில் இருந்த கத்திகள், மருத்துவப் பிரிவில் இருந்த கத்தரிகள் மற்றும் உடற்பயிற்சி கூட உபகரணங்களின் உடைந்த பாகங்கள் உள்ளிட்டவற்றையும் தாக்குதலுக்குப் பயன்படுத்தியுள்ளனர்.

மேலும், கைதிகளின் தேவைகளை அறிய சென்ற சிறைச்சாலை அதிகாரிகளும் தாக்குதலுக்கு இலக்காகியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தாக்குதலாளர்கள் அதிகாரிகளின் தலைப்பகுதியை குறிவைத்து தாக்கியதாகவும், அவர்களுக்கு உயிர் சேதம் விளைவிப்பதே நோக்கமாக இருந்திருக்கலாம் என பொலிஸ் தரப்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பவத்தையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளில், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கம்பிகள் மற்றும் கைத்தடிய்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தேங்காய்கள், கத்திகள், கத்தரிகள் உள்ளிட்ட பல பொருட்களும் ஆதாரப் பொருட்களாக பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற இந்த மோதல்களில், ஒரு சிறை அதிகாரி மற்றும் எட்டு காவல் உத்தியோகத்தர்கள் உட்பட மொத்தம் 28 பேர் உயிரிழந்ததாகவும், சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உள்ளிட்ட சுமார் 100 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.