வெளிநாட்டு தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஏற்பாட்டில், வெளிநாடுகளில் பணிபுரியும் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம்  திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 114 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டன.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் ஆகியோருக்கே இந்த உதவித்தொகை வழங்கப்பட்டது.

நிகழ்வில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் மற்றும் பல துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

வெளிநாடுகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த கல்வி உதவித்தொகை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலும் தனது கருத்துகளை வெளியிட்டார்.