வாகுரவெட்டையில் குடிநீர் தட்டுப்பாடு!

( வாகுரவெட்டையிலிருந்து வி.ரி.சகாதேவராஜா)

கதிர்காம காட்டுப்பாதையில் முதல் தரிப்பிடமான வாகுரவெட்டை அல்லது வண்ணத்திர கிணற்றடி எனும் பெரும் நிலப்பரப்பில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது .

அங்கு முதல் நாள் மாலையில் சுமார் 15,000 அடியார்கள் சூழ்ந்திருந்தனர். அவர்களுக்கென்று ஆக இரண்டே இரண்டு தண்ணீர் தாங்கிகள் வைக்கப்பட்டிருந்தன.

ஆதலால் பக்தர்கள் நீண்ட தூரம் நடந்து வந்த களையையுடன் தண்ணீருக்காக வெற்று கலன்களுடனும் போத்தல்களுடனும் நீண்ட கியூ வரிசையில் காணப்பட்டனர்.

குடிநீர் வழங்குவதற்கு என்று பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வந்த போதிலும் இவ்வாறான சீர்கேடு காணப்படுவது எதிர்காலத்தில் களையப்பட வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள சைவநெறிக்கூடம் வலம்புரியோன் அமைப்புகளுக்கு மாத்திரம் உகந்தை- குமுக்கன் பிரதேச குடிநீர் வழங்கலுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஏனைய சிவதொண்டன் சேவற்கொடியோன் அமைப்புக்களையும் முதல் நாள் இப்பகுதியில் குடிநீர் வழங்க அனுமதி வழங்கியிருந்தால் அடியார்கள் இவ்விதம் கால்கடுக்க கியூ வரிசையில் நின்று சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறப்படுகிறது.
மொனராகலை பிரதேசத்தில் அங்குள்ள அமைப்புக்கள் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்திருக்கலாம்.
திட்டமிடல் கூட்டங்கள் இனிவரும் காலங்களில் அர்த்த புஷ்டியாக அடியார்கள் நலன் கருதி கூட்டப்படவேண்டும்.

அம்பாறை மாவட்ட இரண்டாவது மீளாய்வு கூட்டம் கடந்த 7 ஆம் திகதி லாகுகலையில் கூட்டப்பட்ட இருந்தும் இறுதி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டது.

ஒரு காலமும் இல்லாதவாறு,கானகமெங்கும் கனகாம்பர கம்பளம் போன்று சுமார் 16,000 அடியார்கள் பரவிக்கிடக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.