கொழும்பு: இலங்கையில் மின்சார ரயில் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு முன்னெடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
‘கனவு இலக்கு’ (Dream Destination) திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட நாரஹேன்பிட்டி ரயில் நிலையத்தை மீண்டும் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் ரயில் சேவையை விரிவுபடுத்தி நவீனமயப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக மின்சார ரயில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
முதற்கட்டமாக, கொழும்பு – பாணந்துறை, கொழும்பு – மாகும்புர மற்றும் கொழும்பு – ராகம ஆகிய ரயில் பாதைகளில் மின்சார ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
ரயில் துறையில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், ரயில் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு பயணிகளுக்கான வசதிகளும் அதிகரிக்கப்படும் என அவர் கூறினார்.
பொதுப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும் என தெரிவித்த அமைச்சர், நாட்டின் ரயில் உட்கட்டமைப்பை நவீனமயப்படுத்துவதற்காக அரச மற்றும் தனியார் துறை இணைந்த திட்டங்களும் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார்.


