கொழும்பு: நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறை மோதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு சிறைச்சாலை அதிகாரி உயிரிழந்ததைத் தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
கடுமையான காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் எட்டு பேர் சிறைச்சாலை அதிகாரிகளும், 20 பேர் கைதிகளுமாக உள்ளனர்.
கடந்த ஜூலை 6 ஆம் திகதி காலை, நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் இரண்டாவது முறையாக மோதல் வெடித்தபோது, கைதிகள் மேற்கொண்ட தாக்குதல்களில் ஏழு சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்திருந்தனர்.
இந்த வன்முறைச் சம்பவத்தில் காயமடைந்த 100-க்கும் மேற்பட்டோர் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் கவலைக்கிடமான நிலையில் இருந்த 20 பேர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில், முன்னதாக உயிரிழந்த ஏழு சிறைச்சாலை அதிகாரிகளின் பூதவுடல்கள் இன்று (ஜூலை 8) இறுதி அஞ்சலிக்காக வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டன.
உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவர்களுடன் பணியாற்றிய சிறைச்சாலை அதிகாரிகள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


