வடக்கு, கிழக்கில் இன்னும் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள மக்கள் நிலங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்

நாட்டில் ஆயுத மோதல் முடிவுக்கு வந்து பதினேழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள கணிசமான அளவிலான பொதுமக்களுக்குச் சொந்தமான தனியார் நிலங்கள் இன்னும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளதாக நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இன்றையதினம் (08.07.2026) நடைபெற்ற நாடாளுமன்றக் கேள்வி-பதில் நேரத்தின் போது, தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகள் மற்றும் வடக்கு-கிழக்கில் நிலவும் மந்தகதியான காணி விடுவிப்புத் தொடர்பில் விடயதானத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடம் அடுக்கடுக்கான கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

தேசிய மக்கள் சக்தி வடக்கில் பலாலியில் காணி விடுவிப்பை தேர்தல் விஞ்ஞாபனமாக கூறி வெற்றி பெற்ற போதிலும், அங்கு இன்றளவிலும் பல காணிகள் விடுவிக்கப்படவில்லை என இதன்போது குற்றம் சுமத்தப்பட்டது. இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் நிலங்களை விடுவிப்பதை விரைவுபடுத்துவதாகவும், பாதிக்கப்பட்ட சமூகங்களின் மீள்குடியேற்றத்திற்கு வசதி செய்வதாகவும் உறுதியளிக்கப்பட்ட போதிலும், கள நிலவரம் இன்னும் மாறவில்லை என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்களின் நிலங்கள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதும், பொதுமக்கள் வாழும் பகுதிகளில் நீண்டகாலமாக இராணுவம் நிலைகொண்டிருப்பதும், சாதாரண சிவிலியன் நிர்வாகத்தைத் தாமதப்படுத்துவதுடன், நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் முயற்சிகளையும் பலவீனப்படுத்துகிறது. உண்மையான தேசிய பாதுகாப்புத் தேவைகள் தவிர, இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு நிகரான அளவிற்கு இராணுவப் பரவலாக்கம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்படுவதும், இராணுவமயமாக்கல் நீக்கப்படுவதும் நல்லிணக்கம், மீள்குடியேற்றம் மற்றும் பொருளாதார மீட்சி ஆகியவற்றிற்கு அவசியமானவையாகும் என வலியுறுத்தப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைத் தொடர்ந்து, மட்டக்களப்பில் இரண்டு இராணுவ முகாம்கள் விடுவிக்கப்பட்டதை வரவேற்பதாகக் குறிப்பிட்ட அதேவேளை, ஒட்டுமொத்தமாக நிலங்கள் விடுவிக்கப்படும் வேகம் மந்தமாக இருப்பதற்கு எதிராகப் பாதிக்கப்பட்ட பல சமூகங்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

அமைச்சரிடம் முன்வைக்கப்பட்ட முக்கிய கேள்விகள்:
(a) நிலங்களின் விபரம் மற்றும் காலக்கெடு: வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முப்படைகளினாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் அரச நிலங்களின் மொத்த அளவு மாவட்ட ரீதியாக எவ்வளவு? தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலங்களின் அளவு, இடங்கள் மற்றும் தேதிகள் எவை? இன்னும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள நிலங்களின் அளவு எவ்வளவு? மற்றும் எஞ்சியுள்ள நிலங்களை விடுவிப்பதற்கான அரசாங்கத்தின் காலக்கெடு என்ன?

(b) வலிகாமம் வடக்கு: 16 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படாமலும், மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முற்றிலுமாக விடுவிக்கப்படாமலும் உள்ள வலிகாமம் வடக்கில், பொதுமக்களின் நிலங்களை விடுவிப்பதை நிறைவு செய்வதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

(c) மயிலிட்டி மற்றும் பலாலி பகுதிகள்: யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மயிலிட்டி மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் நடைபெறும் போராட்டங்கள் தொடர்பாகவும், மயிலிட்டி கணிக்கமாதா கோவில், வசந்தபுரம் (வஸாவிலான்) மணம்பிராய் பிள்ளையார் கோவில், புனித செபஸ்தியான் தேவாலயம், மயிலிட்டி ரோமன் கத்தோலிக்க பாடசாலை மற்றும் வஸாவிலான் ஸ்ரீ வேலுப்பிள்ளை வித்தியாலயம் ஆகியவற்றுக்கான அணுகுமுறையை (போக்குவரத்து வழியை) மீண்டும் வழங்குவதற்கும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

(d) கிளிநொச்சி மாவட்டம்: கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச சபை விரிவாக்கத்திற்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள், 551 வது டிவிஷன் (பிரிவு) பகுதியில் உள்ள நிலங்கள், மற்றும் இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலயம், இரணைமடு சந்தி மற்றும் விவசாயத் திணைக்களம் ஆகியவற்றை பாதிக்கும் வகையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை விடுவிப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

(e) முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு: முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்பிலவில் எஞ்சியுள்ள 59 ஏக்கர் பொதுமக்களின் நிலங்களை விடுவிப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

மயிலிட்டி துறை பகுதி: 700 குடும்பங்களுக்குச் சொந்தமான 556 ஏக்கர் காணிகள் இன்றளவில் விடுவிக்கப்படவில்லை. கலைமகள் பாடசாலைக்கு சொந்தமான மைதானமும் இன்னும் முடக்கப்பட்டுள்ளது.

பலாலி பகுதி: பலாலி தெற்கு, கிழக்கு, வடக்கு, மேற்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் 300 குடும்பங்களுக்குச் சொந்தமான 556 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவில்லை.

கிளிநொச்சி: கரைச்சி நூலகம் விஸ்தரிப்புக்கான காணி மற்றும் இரணைமடு விவசாய ஆராய்ச்சி நிறுவனத்துக்குச் சொந்தமான காணிகள் விடுவிக்கப்படவில்லை.

கேப்பாபிளவு விவகாரம்: கேப்பாபிளவு பகுதியில் உள்ளவர்களுக்கு மாற்று காணி வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுவது முற்றிலும் தவறானதாகும். சீனியார்மோட்டை பகுதியில் 44 பேருக்கு தற்காலிக காணிகளே வழங்கப்பட்டுள்ளன. மாறாக, கேப்பாபிளவு பகுதியில் 59.5 ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

குரும்பைச்சிட்டி: இப்பகுதியில் உள்ள இந்து மயானத்துக்குரிய காணி இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளது.

இவ்விடயங்கள் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு, விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சரிடமிருந்து நாடாளுமன்றத்தில் தெளிவான மற்றும் விரைவான பதில்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.