திருகோணமலைக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க புதிய நடவடிக்கை!

வடமலை ராஜ்குமாா்
திருகோணமலை மாவட்ட வர்த்தக மற்றும் தொழில் சபை தனது 24 ஆண்டுகால சேவையை முன்னிட்டு, மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் வகையில் புதிய முதலீட்டு மற்றும் சுற்றுலா முன்னெடுப்புகளை அறிவித்துள்ளது. இது தொடர்பாக கடந்த திங்களன்று (06) உப்புவெளியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சபையின் தலைவர் திரு. கே. குலதீபன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருகோணமலை மாவட்டத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது சபையின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதன் ஒரு பகுதியாக, அண்மையில் சபையின் இயக்குநர் குழு தலைமையிலான பிரதிநிதிகள் குழு தென்னிந்தியாவின் சென்னை மற்றும் மதுரை நகரங்களுக்கு விஜயம் செய்து, வணிகத் தலைவர்கள், முதலீட்டாளர்கள், வர்த்தக சபைகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளுடன் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டது.

இந்தச் சந்திப்புகளில் இந்திய முதலீட்டாளர்கள் திருகோணமலையில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் வெளியிட்டுள்ளதாகவும், அதன் விளைவாக ஆரம்பகட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) ஒன்று ஏற்கனவே கைச்சாத்திடப்பட்டுள்ளதுடன், மேலும் பல ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் தொடர்ச்சியாக, இந்திய முதலீட்டாளர்கள் அடங்கிய குழுவொன்று ஆகஸ்ட் 22 மற்றும் 23 ஆகிய தினங்களில் திருகோணமலைக்கு வருகை தந்து மேலதிக புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும், முதலீட்டு வாய்ப்புகளை ஆராயவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒத்துழைப்புகள் முதலீட்டு ஊக்குவிப்பு, தொழில்நுட்பப் பரிமாற்றம், தொழில் அபிவிருத்தி மற்றும் நீண்டகால பொருளாதார கூட்டாண்மைகளை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுலாத் துறைக்கு முன்னுரிமை
திருகோணமலையின் பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலாத்துறை முக்கிய பங்கு வகிப்பதை கருத்தில் கொண்டு, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா துறையை சபையின் முதல் மூலோபாய முன்னுரிமையாக அடையாளப்படுத்தியுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.

அதற்கமைய, ஜூலை 20 ஆம் தேதி சபையின் மற்றொரு பிரதிநிதிகள் குழு இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டு, சென்னை, மதுரை, கோயம்புத்தூர், கேரளா, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 45 முதல் 49 வரையிலான முன்னணி பயண முகவர்கள் மற்றும் சுற்றுலா ஏற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடவுள்ளது. இதன் மூலம் திருகோணமலையை சர்வதேச சுற்றுலா மையமாக மேம்படுத்துவதும், கிழக்கு மாகாணத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதும் இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெற்ற வணிக மற்றும் சுற்றுலா தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதில் சென்னையில் உள்ள இலங்கை பிரதி உயர் ஆணையம் வழங்கிய ஒத்துழைப்பிற்கு சபை தனது நன்றியை தெரிவித்துள்ளது.

மேலும், முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலா நிறுவனங்களுக்கு தேவையான மாவட்ட விவரங்கள், வரலாற்றுத் தகவல்கள், முதலீட்டு ஆவணங்கள், விளக்கக்காட்சிகள் மற்றும் விளம்பரப் பொருட்களைத் தயாரிப்பதில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகம் வழங்கிவரும் பங்களிப்பையும் சபை பாராட்டியுள்ளது.

இதனிடையே, கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தினால் ஆரம்பிக்கப்பட்டு தற்போது மாநகர சபையின் நிர்வாகத்தில் உள்ள திருகோணமலை சுற்றுலா தகவல் மையத்தின் எதிர்காலம் குறித்தும் வர்த்தக மற்றும் தொழில் சபை கவலை வெளியிட்டுள்ளது.

சுற்றுலா தகவல் மையம் என்பது வெறும் வருவாய் ஈட்டும் நிலையமாக அல்லாது, தொழில்முறை திறன், சுற்றுலா அறிவு மற்றும் பார்வையாளர்களை மையப்படுத்திய சேவையுடன் இயங்க வேண்டிய ஒரு முக்கிய பொது நிறுவனமாகும் என சபை வலியுறுத்தியுள்ளது.

மேலும், நீண்டகால வளர்ச்சி நோக்கமின்றி தனியார் நிறுவனங்களுக்கு இத்தகைய முக்கிய வசதிகளை குத்தகைக்கு வழங்குவது, திருகோணமலையின் சுற்றுலா மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.