Messenger
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தை அடுத்து பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திடீர் உடல்நலக்குறைவு காரணமாகக் குறித்த கைதி காலி கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளின் சிரேஷ்ட அதிகாரிகளும் இன்று காலை 7.30 மணிக்கு விசேட கலந்துரையாடலுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பிலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 1,033 கைதிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த மோதலை வழிநடத்தியதாகக் கூறப்படும் கட்டுவெல்லேகம சுரேஷ் என்பவரும் பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் 7 பேர் சிறைச்சாலை அதிகாரிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காயமடைந்த நூற்றுக்கும் அதிகமானோரில் 20 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மோதல் தொடர்பான விசாரணைகளில் பாதுகாப்பு பிரிவினர் பல முக்கிய தகவல்களைக் கண்டறிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோதலில் ஈடுபட்ட சில கைதிகள் அதிகாரிகளின் தலை மீது பெரிய கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் சிறைச்சாலை தரப்புக்கள் தெரிவித்துள்ளன.


