எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்புமாவட்டத்தில் தொழில் நுட்ப மற்றும் தொழிற்கல்வி (TVET) துறையின் மீள்திறனை வலுப்படுத்தி, அனைவரையும் உள்ளடக்கிய தொழில்வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில், உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன் அவர்களின் மேற்பார்வையில், மாவட்ட திறன் அபிவிருத்தி இணைப்பாளர் கே. சிவகுமார் அவர்களின் ஏற்பாட்டில், பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (07) நடைபெற்றது.
வுஸ்க் நிறுவனத்தின் அனுசரணையில் நவீன தொழில்சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப தரமான தொழிற்பயிற்சிகளை வழங்கி திறமையான தொழிலாளர்களை உருவாக்குவது தொடர்பாக, அரச மற்றும் தனியார் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
மாவட்டத்தின் தொழில்துறை வளர்ச்சியை வலுப்படுத்தும் வகையில், தொழிற்பயிற்சி நிறுவனங்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் தொழில் வழங்குநர்களுக்கிடையிலான ஒத்துழைப்பு மற்றும் தொடர்பாடலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது.
இதன் போது மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் பயிற்சிகளுக்கான திட்டம் மற்றும் சான்றிதழ்களின் தரம் தொடர்பான தெளிவூட்டல்களை வழங்கினர்.
மேலும், தொழில்துறைத் திறன்களை மேம்படுத்தி, நவீன உலகச் சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப திறன்மிக்க மனிதவளத்தை உருவாக்கும் நோக்கில் இப் பிராந்திய தொழில்துறை மன்றக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்டத்தில் 77 அரச மற்றும் தனியார் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் இயங்கி வந்தாலும், அவற்றில் 29 நிறுவனங்கள் மட்டுமே முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், வுஸ்க் நிறுவன பிரதிநிதிகள், மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு அதிகாரிகள், அரச மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த கல்வி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


