நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை தொடர்பில் விசேட உரையாற்றவுள்ள நீதி அமைச்சர்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை தொடர்பில், நாடாளுமன்றத்தில் விரிவான உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் சூரியன் செய்திப் பிரிவுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அதற்கமைய, இன்று நடைபெறும் நாடாளுமன்ற அமர்வில், குறித்த சம்பவம் தொடர்பில் தாம் தெளிவுபடுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையால், அலுவலக கட்டடம், ஆவணக் காப்பகம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், எந்தவித ஆவணங்களையும் பெற்றுக் கொள்ள முடியாது போயுள்ளதாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, சூரியன் செய்திப் பிரிவுக்குக் கூறியுள்ளார்.

இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 700 கைதிகள் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த சம்பவத்தில் உயிரிழந்த 26 பேரின் உடலங்களும் நீர்கொழும்பு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

காயமடைந்த நூற்றுக்கணக்கானவர்களில் 18 பேர் ராகம, வெலிசர மற்றும் கம்பஹா ஆகிய மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் 04 சிறைச்சாலை அதிகாரிகள் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று முந்தினம் ஏற்பட்ட மோதலில் 02 பேர் உயிரிழந்த நிலையில், சுமார் 34 பேர் வரை காயமடைந்தனர்.

அன்றிரவே நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், நேற்று முற்பகல் சிறைச்சாலையில் மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளது.

அதன்படி, நேற்று ஏற்பட்ட மோதல் தீவிரமடைந்த நிலையில், 26 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் நீர்கொழும்பு சிறைச்சாலை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.