ஐரோப்பாவை உலுக்கும் காட்டுத்தீ !

ஐரோப்பிய நாடுகளில் நிலவிவரும் கடும் வெப்ப அலையைத் தொடர்ந்து, அங்குள்ள பல நாடுகளில் காட்டுத்தீ மிக உக்கிரமாகப் பரவி வருகின்றது.

இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர்.

போர்த்துகல், ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் பரவியுள்ள இந்தக் காட்டுத்தீயினால், இதுவரை சுமார் 20,000 ஹெக்டேயர் பரப்பளவிலான நிலங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன.

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் எல்லைப் பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த 700க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

அங்கு மாத்திரம் 10,000க்கும் அதிகமான மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நிலைமை மோசமடைந்து வருவதால், பிரான்ஸிற்கு உதவுவதற்காக சைப்ரஸ் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளிலிருந்து நீர்விநியோக வானூர்திகளை ஐரோப்பிய ஒன்றியம் அனுப்பியுள்ளது.

காட்டுத்தீயின் தாக்கம் காரணமாக, பிரான்ஸில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற Tour de France மிதிவண்டிப் பந்தயத்தைக் காண்பதற்குப் பார்வையாளர்களுக்குத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, கிரீஸ் நாட்டின் தெசலோனிகி (Thessaloniki) நகரில் ஏற்பட்ட காட்டுத்தீ தொழிற்சாலைகளுக்குப் பரவியதை அடுத்து, அங்கிருந்து வெளியாகும் நச்சுப் புகை காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எதென்ஸ் நகருக்கு அருகாமையிலும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்களும் வானூர்திகளும் களமிறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.