எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
அனர்த்த காலங்களில் விசேட தேவைக்குட்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு செயலமர்வு இன்று (30) மட்டக்களப்பில் நடைபெற்றது.
பழைய மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு உதவி மாவட்ட செயலாளர் ஜி. பிரணவன் தலைமையில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி சந்திரகலா கோணேஷ்வரன் ஏற்பாட்டில், மகளிர் அபிவிருத்தி நிலைய ஒருங்கிணைப்பாளர் ஜே. எஸ். ஜோதியின் இணைப்பாக்கத்தில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் வாழும் 9,820 விசேட தேவைக்குட்பட்டவர்களின் அனர்த்தகால பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இச்செயலமர்வில், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் ஏ. எஸ். எம்.சியாத் பிரதான வளவாளராகக் கலந்து கொண்டு, அனர்த்த காலங்களில் பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக விளக்கமளித்தார்.
விசேட தேவைக்குட்பட்டவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் மாவட்ட செயலகம் தொடர்ச்சியாக பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு மகளிர் அபிவிருத்தி நிலையம் அனுசரணை வழங்கியிருந்தது.
நிகழ்வில் பிரதேச செயலகங்களின் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக நல அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


