எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
தேசிய ரீதியாக இடம் பெற்ற சிட்டிசன் மிரர் போட்டிகளில் ஏழு AAA தரத்தினை பெற்ற பிரதேச செயலகங்களுக்கான கௌரவத்தினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்கள் இன்று பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (24) வழங்கி வைத்தார்.
கைத்தொழில் முயற்சியாண்மை அமைச்சினால் தேசிய ரீதியில் மாவட்டங்களுக்கிடையிலான சிட்டிசன் மிரர் போட்டிகளில் AAA தரத்தினை பெற்ற 50 பிரதேசப்பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டன.
702 முக்கிய செயல்திறன் குறியீடுகளை (KPIs) கொண்ட இந்த மதிப்பீட்டு முறைமையின் கீழ் பங்கேற்ற 284 பிரதேச செயலகங்களின் செயல்திறன் அடிப்படையில் AAA முதல் D வரை தரப்படுத்தப்பட்டுள்ள இப்போட்டிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்த ஏழு பிரதேச செயலகங்கள் 7 AAA பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளன.
இவற்றில் நிர்வாகப் பிரிவு, கணக்குப் பிரிவு, திட்டமிடல் பிரிவு, காணிப் பிரிவு, பதிவாளர் பிரிவு, வெளிக்களப் பிரிவு மற்றும் விசேட செயற்றிட்டம் எனும் ஏழு பிரிவு ரீதியான தரவுகளைக் கொண்டு இப் போட்டிகள் இடம் பெற்றது.
பிராந்திய நிர்வாக உற்பத்தித் திறன் குறியீடு 1.0 மென்பொருள் அமைப்பு போட்டிகளில் மண்முனை வடக்கு பிரதேச செயலகம் மாவட்ட ரீதியில் AAA தரப்படுத்தலுடன் முதலாவது இடத்தையும் தேசிய ரீதியில் 7வது இடத்தையும் பெற்றுள்ளது.
மாவட்டத்தில் சிட்டிசன் மிரர் போட்டிகளில் AAA தரப்படுத்தலுக்கு அமைவாக இரண்டாவது இடத்தினை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகமும் மூன்றாம் இடத்தினை மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் நான்காவது இடத்தினை கோறளைப்பற்று பிரதேச செயலகமும், ஐந்தாவது இடத்தினை மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகமும், ஆறாவது இடத்தினை காத்தான்குடி பிரதேச செயலகமும், ஏழாவது இடத்தினை போரதீவு பற்று பிரதேச செயலகமும் பெற்றுக்கொண்டது.
மாவட்ட அரசாங்க அதிபர் இப்பிரதேச செயலாளர்களுக்கு பாராட்டுக்களையும் கௌரவத்தினையும் வழங்கினார். இவ் பாராட்டு நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீதாந்த், பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.எஸ்.சசிகரன், மாவட்ட பிரதம கணக்காளர் திருமதி காயத்திரி ரமேஸ், பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தேசிய உற்பத்தித்திறனை மேம்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த குறியீட்டு முறைமை, பிரதேச செயலகங்களின் நிர்வாகத் திறன், சேவை வழங்கல் தரம் மற்றும் பொதுமக்கள் திருப்தி ஆகியவற்றை அளவிடும் முக்கிய கருவியாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்கள் அளிக்கையினூடாக இப்போட்டிகள் தொடர்பான விளக்கங்களை வழங்கினார்.


