மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் 2025 ஆண்டுக்கான தேசிய விருதுகள் வழங்கி வைப்பு.

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் 2025 ஆண்டுக்கான தேசிய விருது வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ் அருள்ராஜ் அவர்களின் தலைமையில் கிழக்கு மாகாண இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் சிரேஸ்ட இணைப்பாளர் எஸ்.ரீ. சுதாகரன் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (24) இடம் பெற்றது.

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்டத்தில் பிரதேச செயலக ரீதியில் ஆயிரம் பயனாளிகளுக்கு மேல் இணைத்துக் கொண்ட மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களுக்கும் மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் சோமசுந்தரம் ரங்கநாதன் அவர்களுக்கும் மேலும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் முபாரக் அவர்களுக்கும் மாவட்ட அரசாங்க அதிபர் தேசிய விருதுகள் மற்றும் நினைவுச் சின்னங்களை வழங்கி கௌரவித்தார்.

இலங்கை சமூக பாதுகாப்பு சபை அரச ஓய்வூதியம் பெற்றுக் கொள்ளமுடியாத பிரஜைகளும் மற்றும் அறுபது வயது முதிர்ந்தவர்களுக்கும் அரச பாதுகாப்புடன் ஓய்வூதியத்தினை பெற செய்வதற்கான வாய்ப்பு வழங்குகின்றது.

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் www.ssb.gov.lk எனும் இணையத்தினுடாக அனைத்து சேவைகளையும் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.எஸ்.சசிகரன், மாவட்ட பிரதம கணக்காளர் திருமதி காயத்திரி ரமேஸ், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக கணக்காளர் என பலர் கலந்து கொண்டனர்.