கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபையினால் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் சுற்றுலாத்துறையை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் (05) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

CEPA, UNDP ஆகிய அரச சார்பற்ற நிறுவனங்களின் அனுசரணையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில்
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எம். ஸாஹித் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதான சுற்றுலா தளமாக காணப்படும் பாசிக்குடா மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சுற்றுலாத் துறையின் மூலம் வருமானங்களை ஈட்டும் விஷேட கலந்துரையாடலாக இடம்பெற்றதுடன், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் காணப்படும் சுற்றுலாத்துறைக்கு ஏற்ற வளங்கள் மற்றும் இடங்கள் குறித்து ஆராயப்பட்டது.
அத்துடன் அவற்றை திறம்பட அபிவிருத்தி செய்வதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

பிரதேச இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புகளை சுற்றுலாத்துறையின் ஊடாக எவ்வாறு உருவாக்கலாம், அதற்குத் தேவையான பயிற்சிகள் மற்றும் வழிகாட்டல்களை எவ்வாறு வழங்கலாம் என்பதுடன், இத்துறையின் வளர்ச்சிக்குத் தேவையான ஆதரவு மற்றும் வளத் தேவைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

மேலும், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் சுற்றுலாத்துறைக்கு பொருத்தமான தளங்கள் அடையாளப்படுத்தப்பட்டதுடன், பெண்கள் தலைமையிலான குடும்பங்கள் மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கு சுற்றுலாத்துறையின் ஊடாக தொழில்வாய்ப்புகள் மற்றும் வருமானம் ஈட்டும் வாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பாகவும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதிநிதியாக கலாநிதி திஸாநாயக்க உள்ளிட்ட பலரும் கலந்துகொண்ட
இந்நிகழ்வில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கலாசார உத்தியோகத்தர், விதாதா வளநிலைய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்..