(ஷினா)
புலம்பெயர் கொள்கை அபிவிருத்திக்கான சர்வதேச நிறுவனம்,வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியாகம் ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர் தகவல் நிலையம் (Migration Information Centre – MIC) வேலை திட்டத்தின் கீழ் இலங்கை வாழ் பொதுமக்கள் புலம்பெயர் வெளிநாட்டு பயணங்களின் போது சட்டவிரோதம் அற்ற பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு இன்று (13) மருதமுனை மூன் விலேஜ் விடுதி மண்டபத்தில் நடைபெற்றது.
சுவிஸ்லாந்து நாட்டின் அனுசரணையோடு நடைபெறும் இந்த வேலை திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பாதுகாப்பான புலம்பெயர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் முன்னெடுக்கப்படும் சேவைகள், முறையற்ற விதத்தில் மேற்கொள்ளும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயணங்களின் போது ஏற்படும் இடையூறுகள், பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களை அறிந்து கொள்வதும் மற்றும் பாதுகாப்பான புலம்பெயர் பயணங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதோடு சட்டவிரோதமான புலம்பெயர் வெளிநாட்டு பயணங்கள் ஊடாக பொதுமக்கள் மற்றும் தனி நபர்கள் மத்தியில் ஏற்படும் பிரச்சினைகள், சமூகப் பிரச்சினைகள் தொடர்பிலும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன. முறையற்ற விதத்தில் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வதால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏற்படுகின்ற இழப்புக்கள், எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் சுவிட்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி சிரி வால்ட் (Dr. Siri Walt) கலந்து கொண்டு புலம்பெயர் தகவல் மையத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற வேலைத் திட்டங்கள் தொடர்பிலும், புலம்பெயர் வெளிநாட்டு பயணங்களின் போது ஏற்படுகின்ற தனிநபர் சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் ஊடகவியலாளர்களின் கருத்துக்களையும் கேட்டு அறிந்து கொண்டார்.
நிகழ்வின் போது புலம்பெயர் கொள்கை அபிவிருத்திக்கான சர்வதேச நிறுவனத்தின் இணைப்பாளர் சமீர் சாலிஹ், ஆலோசகர் சுமித்ரா சதாசிவம் ஆகியோர் சட்டரீதியான முறையான வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வது எவ்வாறு என்பது தொடர்பிலும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் ஊடாக வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கு பொதுமக்கள் அறிந்திருக்க வேண்டிய தகவல்கள் குறித்தும் ஊடகவியலாளர்களுக்கு இங்கு விளக்கமளித்தனர்.
இந்த நிகழ்வில் புலம்பெயர் கொள்கை அபிவிருத்திக்கான சர்வதேச நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் குறித்த நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலை திட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக ஒன்றிணைந்து பயணிக்கும் ஊடகத்துறை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.


