மே-18 முல்லிவாய்க்காலில் மனித நாகரிகம் கேள்விக்குள்ளாக்கப்பட்ட நாள். ஒரு விடுதலைப்போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து ஆயுதமும் ஆயுதமும் மோதிக்கொண்டதற்கு அப்பால் நிராயுதபாணிகளான அப்பாவி மக்களின் உயிர்களை இரத்தமும் சதையுமாக சிதைத்து ஒரு இனத்தின் விடுதலைப்போராட்டம் முல்லிவாய்க்காலில் மெளனிக்கச்செய்யப்பட்ட நாள் . முழு உலகமும் வெட்கித் தலைகுனிந்த அந்த நாளின் 17வது ஆண்டு நினைவில் உறவுகளை இழந்த, அங்கங்களை இழந்த புதிய சமூகங்களின் உறவுகளினதும் காணமலாக்கப்பட்டவர்களை, கையளிக்கப்பட்ட உறவுகளை இன்றுவரை தேடியலையும் சொந்தங்களின் வேதனைகளோடு ஈரோஸ் ஜனநாயக முன்னணியாகி நாங்களும் இணைந்துக்கொள்கிறோம்
ஆயிரக்கணக்கில் உயிர்கள் பறிக்கப்பட்டு, காணாமலாக்கப்பட்டு பல இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயரவைக்கப்பட்ட மாபெரும் மனித அவலம் நிகழ்த்தப்பட்ட இந்த நாளை வெறுமனே நினைவுநாளாக கடந்துபோகாமல் இதுபோன்ற பேரவலம் இன்னுமொருமுறை நடவாமையை தடுக்கவேண்டும். இந்த அவலம் ஏற்பட்டதற்கான காரணிகளாக இருந்த பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கு தீர்வு காணவேண்டும்
சர்வதேச சமூகமும் ஐக்கியநாடுகள் சபையும் அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தமுடியாத கையாலாகாத தனத்தை ஏற்றுக்கொண்டபோது, மனித அவலமொன்று நடந்து முடிந்த பின் மனிதவுரிமை பேரவை ஊடாக நீதியை பெற்றுக்கொள்ளமுடியும் என்ற இறுதி நம்பிக்கையும் இழந்த நிலையில் தான் தமிழ் மக்கள் இன்று (மே-18) பேரவலத்தின் 17ம் ஆண்டை நினைவு கூருகின்றனர்.
சுதந்திரத்திற்கு பின் தமிழ்பேசும் மக்கள் மீதான தொடர்ச்சியான அடக்குமுறையும், ஒடுக்குமுறையும், இனவாத தாக்குதல்களும், தலைவிரிதாதாடிய போது அதற்கெதிரான அத்தனை அகிம்சை போராட்டங்களும் தோல்வியடைந்த நிலையில்தான் தமிழ்பேசும் மக்கள் பக்கம் ஆயுதபோராட்டத்தின் பக்கத் பலவந்தமாகத் தள்ளப்பட்டனர். அப்போராட்டம் தமிழ் மக்களின் ஆதரவைபெற்று, உலகத்தின் கவனத்தை ஈர்த்து, சர்வதேச மத்தியஸ்த பேச்சுவார்தைகள் நடைபெற்றும் தீர்வுகிடைக்காது போராட்டம் தொடர்ந்தது. இந்தநிலையில் இலங்கை அரசாங்கம் பல்வேறு நாடுகளின் உதவியுடன் 2009ம் ஆண்டு தமிழ்மக்களின் போராட்டத்தை மெளனிக்கச்செய்தது.
ஆயுதப்போராட்டம் மௌனித்திருந்தாலும் யுத்தத்தின் காரணிகள் அப்படியே இருக்கின்ற நிலையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் தொல்லியல், வனவளம், வனஜீவராசிகள், மகாவளி அதிகாரசபை போன்ற அரச இயந்திரங்களாலும், புதிய அபிவிருத்தி திட்டங்கள் என்ற போர்வையிலும் நில அபகரிப்பும், மலையகத்தமிழர்களுக்கான நிலவுரிமை மறுப்பும், பாகுபாடுகளும் பெருந்தோட்ட பாட்டாளி வர்க்கத்தின் மீதான அடக்குமுறைகளும், அடாவடித்தனங்கள் ,தோட்ட அதிகாரிகளின் தொழிலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களும் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றது
கடந்த கால அரசாங்கங்கள் விட்ட தவறை நாங்கள் செய்யமாட்டோம். இந்த நாட்டில் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிற தமிழ் பேசும் சமூகங்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுப்போம். பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவோம். முறைமை மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று கூறி பல இலட்ச வாக்குகளை பெற்று அதிகாரத்தை கைப்பற்றிய புதிய அரசாங்கமும் ஒருவருடம் கடந்தும் தீர்வுகளை முன்வைக்காத நிலையில் யாரிடம் நியாயம் கோருவது என்று தெரியாத திக்கற்ற நிலைக்கு தமிழ்பேசும் மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்
ஆகவே இந்த நாட்டின் ஆட்சியாளர் தமிழ்பேசும் சமூகங்களுக்கு பிரச்சினை இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். அப்பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வொன்றை வழங்குவதற்கு நேர்மையான வழிமுறைகளை பின்பற்றவேண்டும். தமிழ்ச் சமூகங்களை தேசிய இனங்களாக ஏற்றுக்கொண்டு, அவர்களின் “தேசிய அந்தஸ்தை” அங்கிகரித்து, தமிழ்பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளையும் எதிர்ப்பார்ப்புகளையும் நிறைவுசெய்யும் வகையில் அர்த்தமுள்ள “அதிர்காரபகிர்வு” முறையொன்றை வழங்கி அவர்கள் கெளரவமான நிலையில் வாழ்வதற்கு இடமளிப்பதே உயிர்நீத்தவர்களுக்கும் காயங்களுடனும் இழப்புகளுடனும் எதிர்ப்பார்ப்புடனும் வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஒட்டுமொத்த மக்களுக்கும் செய்யும் பிராயச்சித்தமாக இருக்கும்.


