எண்ணெய் விலையில் மாற்றம் வருமா?

எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான ‘ஓபெக்’ (OPEC) அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) வெளியேறுவதாக அறிவித்துள்ளமை, சர்வதேச எண்ணெய் சந்தையில் அந்த அமைப்பின் செல்வாக்கு மற்றும் அதன் எதிர்காலம் குறித்த பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சவூதி அரேபியாவின் தலைமையிலான இந்தக் கூட்டமைப்பின் நான்காவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான ஐக்கிய அரபு இராச்சியத்தின் இந்த முடிவு, அமைப்பின் உறுதிப்பாட்டை கேள்விக்குறியாக்கியுள்ளது.

ஓபெக் அமைப்பிலிருந்து வெளியேறும் முதல் நாடு ஐக்கிய அரபு இராச்சியம் அல்ல என்றாலும், வெளியேறும் நாடுகளில் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர் இதுவேயாகும்.

ஓபெக் அமைப்பு சர்வதேச எண்ணெய் விலையை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தற்போது ஒரு பெரிய உற்பத்தியாளர் வெளியேறுவதன் மூலம், சந்தையை கட்டுப்படுத்தும் அந்த அமைப்பின் ஒட்டுமொத்த திறன் குறையக்கூடும்.

இது சவூதி அரேபியாவின் தலைமைத்துவத்திற்கு விடுக்கப்பட்ட ஒரு சவாலாகவும் பார்க்கப்படுகிறது.

ஓபெக் அமைப்பில் இருக்கும் வரை, குறிப்பிட்ட அளவு எண்ணெயை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இருந்தது.

தற்போது வெளியேறுவதன் மூலம், தனது விருப்பப்படி உற்பத்தியை அதிகரித்து பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வளைகுடா பிராந்தியத்தின் இரு பெரும் சக்திகளான சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவற்றுக்கு இடையே எண்ணெய் கொள்கைகளில் நீண்டகாலமாக முரண்பாடுகள் நிலவி வந்தன.

இந்த வெளியேற்றம், பிராந்திய அரசியலில் புதிய அதிகாரப் போட்டியை உருவாக்கக்கூடும்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இந்த அதிரடி முடிவைத் தொடர்ந்து, குவைத் அல்லது ஈராக் போன்ற மற்ற நாடுகளும் இதேபோன்ற முடிவை எடுக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அவ்வாறு நடந்தால், ‘ஓபெக்’ என்ற அமைப்பின் எதிர்காலமே கேள்விக்குறியாகலாம்.