சம்மாந்துறையில் “பிரஜா சக்தி” திட்டங்களை துரிதப்படுத்த நடவடிக்கை

(சர்ஜுன் லாபீர்)

அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு தேசிய வேலைத்திட்டமான “பிரஜா சக்தி” திட்டத்தின் கீழ், சம்மாந்துறை பிரதேசத்திற்கு அனுமதிக்கப்பட்ட 18 அபிவிருத்தித் திட்டங்களையும் துரிதப்படுத்தி, நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைய சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனிபா பணிப்புரை வழங்கினார்.

சம்மாந்துறை பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல் முஹம்மட் அஸ்லமின் ஒருங்கிணைப்பில், இன்று (29) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 51 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும், முதற்கட்டமாக அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 71 மில்லியன் ரூபா நிதியினூடாக உற்பத்திப் பொருளாதாரத்தை மையப்படுத்திய 18 செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

வறுமையை ஒழிப்பதனை பிரதான நோக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த வேலைகளைத் துரிதப்படுத்தி, பிரதேசத்தின் அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகரமாக அடைவதற்கு அனைத்து உத்தியோகத்தtர்களும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என பிரதேச செயலாளர் வலியுறுத்தினார். மேலும், கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டம், வரவு செலவுத் திட்டத்தின் கீழான பணிகள் மற்றும் ஏனைய அபிவிருத்தி வேலைகளையும் காலதாமதமின்றி முன்னெடுக்குமாறு அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்.

இக்கலந்துரையாடலில் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர், விடய உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
5 attachment
• Scanned by Gmail