கால்நடை பண்ணையாளர்கள் பக்கச்சார்பற்ற, ஜனநாயக அடிப்படையில் செயற்பட
முடியாதநிலை உருவாக்கப்படுமானால் சிவில் சமூக அமைப்புகள், கால்நடை
பண்ணையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஜனநாயகமான வழிகளில் தங்களது
எதிர்ப்பை வலுப்படுத்தும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என கிழக்கு மாகாண
சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பண்ணையாளர்களது செயற்பாடுகளுக்கு இடையுயூறு விளைவிக்கப்பட்டுவருகின்றமை
தொடர்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் தலைவர்
ச.சிவயோகநாதன் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (26) விடுத்துள்ள கண்டன
அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை பண்ணையாளர்கள் நீண்டகாலமாக
சுயாதீனமாகவும், பக்கச்சார்பற்ற முறையிலும் தமது நிர்வாக நடைமுறைகளை
முன்னெடுத்து வந்துள்ளனர். அந்த வகையில் தமது நிருவாகத்தினை தாமே
நிருவகிப்பதோடு நாட்டின் பால் உற்பத்தியில் கனிசமான பங்களிப்பையும் ஆற்றி
வந்துள்ளனர். அமைப்புகள் சமூக ஒற்றுமையையும், வாழ்வாதாரரீதியில் நிலைதகு
தன்மையையும் உறுதிப்படுத்திய முக்கியமான பொருளாதார அடித்தளங்களாக
இருந்துள்ளன.
ஆனால் சமீபகாலமாக, அரசுத் தரப்பு தமது ஆதரவாளர்களையும் அரச
அதிகாரிகளையும் பொறுப்புகளில் அமர்த்தி, புதிய நிர்வாக அமைப்புகளை
உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவது கவலைக்கிடமானதும் கடுமையாகக்
கண்டிக்கத்தக்கதுமானசெயற்பாடுகளா
இந்த நடவடிக்கைகள்,அரசின் மீது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட கால யுத்தத்தால் பாதிக்கப் பட்ட பண்ணையாளர்களது வாழ்வாதாரத்தினை
இச் செயற்படு மீண்டும் பின்நோக்கி தள்ளியுள்ளது. அதேபோல் நீண்ட காலமாக
மேச்சல் தரை கேட்டு இரவுபகலாக மூன்று வருடங்களாக போராடிக் கொண்டிருக்கும்
பண்ணையாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஆட்சியிலிருந்த
ஆட்சியாளர்களை விடவும் மிக மோசமான செயற்பாடாக இதனை நாங்கள்
பார்க்கின்றோம்.
இச் செயற்பாடுகள் எதிர்காலத்தில் சுயாதீன அமைப்புகளை பலவீனப்படுத்துவதோடு
மட்டுமல்லாது, கால்நடை பண்ணையாளர்களுக்கிடையிலான ஒற்றுமையையும்
பாதிக்கும் அபாயத்தை உருவாக்குகின்றன.
சமூக நீதி, ஜனநாயக மரபுகள் மற்றும் பக்கச்சார்பற்ற நிர்வாகக் கொள்கைகள்
ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டிய இச்சூழலில், அரசாங்கம் உடனடியாக தலையிட்டு,
கால்நடை பண்ணையாளர்கள் தாங்களே தங்களை நிர்வகிக்கும் சுயாதீன உரிமையை
மீண்டும் உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. எனவே, அரசாங்கம் தனது
தலையீட்டை நிறுத்த வேண்டும். முன்னர் இயங்கி வந்த சுயாதீன நிர்வாக
முறைகளை மீள அமைக்க வேண்டும். பக்கச்சார்பற்ற, ஜனநாயக அடிப்படையிலான
நிர்வாக அமைப்புகளுக்கு உறுதிப்பாடு வழங்க வேண்டும்.
இவை உடனடியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், சிவில் சமூக அமைப்புகள்,
கால்நடை பண்ணையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஜனநாயகமான வழிகளில்
தங்களது எதிர்ப்பை வலுப்படுத்தும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதை
வலியுறுத்துகிறோம்.
இந்த அறிக்கை ஒரு எச்சரிக்கை மட்டுமல்ல; இது நியாயத்திற்கும் உரிமைக்கும்
குரல் கொடுக்கும் ஒரு எழுச்சி முழக்கமாகும். “சுயாதீனம் எங்கள் உரிமை –
அதனைப் பாதுகாப்பது எங்கள் கடமை!”


