சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 3 கோடியே 86 லட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் E-சிகரெட்டுகள் ஆகியவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபருடன் மேலும் ஒரு குழுவினர் வருகை தந்துள்ள நிலையில், இவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏனைய பயணிகள் தமது பயணப் பொதிகளை அங்கேயே கைவிட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொழும்பைச் சேர்ந்த 27 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இக்குழுவினர் இன்று (25) அதிகாலை டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அவர்கள் கொண்டு வந்த 16 பயணப் பொதிகளை சோதனையிட்டபோது, அவற்றுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் உற்பத்தியான ‘மென்செஸ்டர்’ (Manchester) ரகத்தைச் சேர்ந்த 2,29,800 சிகரெட்டுகளை உள்ளடக்கிய 1,149 சிகரெட் கார்ட்டன்களும், 113 E-சிகரெட்டுகளும் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


