ந.குகதர்சன்
வாகரை பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை சேர்ந்த சிறுவர்களுக்கான உளவியல் ஆதரவுகளை வழங்கும் நோக்கில் வாகரை பிரதேச செயலகத்துடன் இணைந்து குறுகிய கால திட்டம் ஏர்ன் சிலோன் நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வாகரை கலாச்சார மண்டபத்தில் இத்திட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு வாகரை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் பி.மதுமிதா தலைமையில் சிறுவர் பாதுகாப்பு மற்றும் நன்னடத்தை உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் திட்டத்திற்கென தெரிவு செய்யப்பட்ட 4 கிராமங்களை சேர்ந்த பாடசாலை அதிபர்கள், கிராம சேவகர்கள், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், சுகாதார சேவைகள் உத்தியோகஸ்தர்கள், பிரதேச சபை செயலாளர், அரசசார்பற்ற நிறுவனங்கள், பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், ஏர்ன் சிலோன் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கே.சதீஸ்குமார், ஏர்ன் சிலோன் நிறுவனத்தினுடைய ஊழியர்கள் மற்றும் EREEDO நிறுவனத்தின் பணிப்பாளர் என பலர் கலந்துகொண்டனர்
இத்திட்டத்திற்கு எமது சமூகத்தின் மீது அதிக அக்கறையுள்ள வைத்தியர் காந்தா நிறஞ்சன் (சிரேஷ்ட வைத்திய ஆலோசகர்-லண்டன்) என்பவர் நிதி அனுசரணை வழங்குகின்றார். மற்றும் இத்திட்டத்தின் கூட்டாளராக பொறியியலாளர் தயாளசீலன் மயுரன்( EREEDO நிறுவனத்தின் பணிப்பாளர்) செயற்படுகின்றார்.
இத்திட்டமானது தெரிவு செய்யப்பட்ட கிராமங்களிலுள்ள சிறுவர்களுக்கு சமூக மனவெழுச்சி கற்றல் செயற்பாடுகள் ஊடாக உளவியல் ஆதரவும் கல்வியில் அதிக ஆர்வமும் உருவாகுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும், அத்துடன் இத்திடத்தில் நேர்மறை பெற்றோரின் எண்ணிக்கையினை அதிகரிப்பதற்கான விழிப்புணர்வுகளும் தன்னை அழித்துக் கொள்ளும் சிந்தனைகளுக்கு எதிரான விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அத்துடன் இத்திட்டத்தினூடாக வாகரை பிரதேசத்தினை சேர்ந்த பல இளம் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்


