பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் உறவினர்களை கைது செய்யும் அவலம் இன்னும் தொடர்கிறதா?

கந்தான பொலிஸ் பயங்கரவாத விசாரணை திணைக்களம் (TID) சேனாபதிகே கார்மல் செல்மா ருக்மணி ரொட்ரிகோ என்ற நடுத்தர வயது பெண்ணை, லண்டனில் வசிக்கும் அவரது மைத்துனரான ந்தால லியனகே ரவி நிரோஷன் பெரேரா என்பவருக்கும், தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்தை இலங்கையில் மீள உருவாக்குவதற்கு முயற்சி செய்வதாக சந்தேகத்தின் கீழ், வவுனியா பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ள சிலருக்குமிடையிலான தொடர்புகள் பற்றியும், லண்டனில் அவரது செயல்பாடுகள் பற்றியும் விசாரிப்பதற்காக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் நேற்று (16) கைது செய்யப்பட்டு பின்னர் ஒரு சட்டத்தரணியின் தலையிட்டால் அவர் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

இச் சம்பவம் தொடர்பாக எமக்கு கிடைத்த நம்பகரமான தகவல்களின்படி, லண்டனில் வாழும் நிரோஷன் பெரேரா என்பவருக்கும், சில நாட்களுக்கு முன்னர் வவுனியா போலீசாரினால் – தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்தை மீள புனரமைப்பதற்காக முயற்சிசெய்வதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கனகரத்னம் என்பவருக்கும் இடையில் நீண்ட கால தொடர்பு இருந்து வந்துள்ளது.

புலிகள் இயக்கத்தை மீள புனரமைப்பதற்கான நிதியை ஐரோப்பாவில் இயங்கும் புலிகள் ஆதரவாளர்களிடமிருந்து திரட்டி நிரோஷன் பெரேரா இலங்கை வரும் போதெல்லாம் கொண்டு வந்து, சிவக்குமார் என்பவர் ஊடாக கனகரத்திடம் கையளிப்பதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது. அத்துடன் நிரோஷன் பெரேரா லண்டனில் இயங்கும் புலிகள ஆதரவு அமைப்புகளுடன் இணைந்து இலங்கை அரசுக்கு எதிராக செயல்படுவதாகவும், இலங்கை அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வதாகவும் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது இது சம்பந்தமாக மேலதிக தகவல்களைப் பெறுவதற்காகவே திருமதி ருக்மணி ரொட்ரிகோ கைது செய்யப்பட்டுள்ளார்.

திருமதி ருக்மணி ரோட்டரி கோ சார்பில் சட்டத்தரணி டில்ஷான் வீரசேகர தலையிட்டமையால், அவர் விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.