சவால்கள் அர்த்த புஷ்டியுடன் எதிர்கொள்ளப்படாவிடின்  ஆளுமை வளர்ச்சி சிதறிடும் –  கலாநிதி. எம்.பி.ரவிச்சந்திரா

சவால்கள் இல்லாத வாழ்க்கையும் அவற்றை அர்த்த புஷ்டியுடன் எதிர்கொள்ள முடியாத செயற்பாடும் இல்லாதுவிடின் ஒரு மனிதனுடைய அர்த்த புஷ்டி உள்ள ஆளுமை வளர்ச்சியை சிதறடித்துவிடும். எனவே மார்க்ஸ், எங்கல்ஸ் கூறுவது போல், ஒன்றுக்கு ஒன்று முரணான கருத்துக்களை மோத விடுவதும் அதுபோல் செயல்பாடுகளை முன்னெடுப்பதும் உண்மையை கண்டறிவதற்கான மிகச் சிறந்த வழி என  மட்டக்களப்பு ஆசிரிய வாண்மை விருத்தி நிலைய சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. எம்.பி.ரவிச்சந்திரா தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஆசிரிய வாண்மை விருத்தி நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட , “ஆசிரியர்களின் வாண்மை விருத்தியும்,மாணவர்களின் அடைவு மேம்பாடும்  எனும் ;தொனிப்பொருளில் நடைபெற்ற “கல்வி செயல்நிலை ஆய்வு மாநாட்டில் தொடக்கவுரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. எம்.பி.ரவிச்சந்திரா,

மட்டக்களப்பு ஆசிரிய வாண்மை விருத்தி நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள செயல்நிலை ஆய்வு மாநாடு இந்நாட்டில் அமைந்துள்ள அத்தனை கல்வி வலயங்களையும் உற்று நோக்கும்போது இது முதலாவது செயல் நிலை ஆய்வு மாநாடாக ஆவணப்படுத்தப்படுகிறது. இந்தப் பெருமை இந்த ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்திற்கும், மட்டக்களப்பு கல்வி லயத்திற்கும் சேர்ந்த ஒன்றாக பதிவிடப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு பாடசாலைகளை தரிசித்து எஸ்.பி.பி.ரி.டி செயல்பாடுகளின் அடிப்படையில் கண்டறியப்பட்ட பாடசாலை கற்றல் கற்பித்தல் பலவீனங்களில் இடர்படும் மாணவருக்கும் வாண்மைத்துவ இணைப்பாடவிதான இடர்பாடுகளுக்கும் நிலைபேறான ஒரு தீர்மானத்தை எட்டும் வகையில் இச்செயல் நிலை ஆய்வு முயற்சி முன்மொழியப்பட்டது . இதன் வழி பாடசாலைகளில் இனம் காணப்பட்ட பிரச்சினைகளை முழுமையாக ஆய்வியல் ஒழுங்கில் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காண செயல்நிலை ஆய்வு அவசியம் என உணரப்பட்டது. அந்த பின் புலத்தில் பொதுவாக இனம் காணப்பட்ட பிரச்சினைகளை தீர்ப்பதற்கான தீர்மானங்களை முன்னெடுப்பதற்கான எமது ஆசிரியர் மத்திய நிலையத்தின் ஊட்டப் பாடசாலைகளில் முதல் பத்து பாடசாலைகள் இனங்காணப்பட்டன.

இதில் தரம் 3, தரம் 2, தரம்1 சி பாடசாலைகள் முறையே 3, 5 ,2 என பத்து பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டன.

இப் பாடசாலை ஆசிரியர்களுக்கு செயல்நிலை ஆய்வு முறை தொடர்பான கருத்தரங்கு, செயல்முறை விளக்கங்களும் வழங்கப்பட்டதோடு, செயல்நிலை ஆய்வு முன்மொழிவு தயாரித்தல், அறிக்கை தயாரித்தல் தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்பட்டன. மேலும் முன்மொழிவு தயாரித்தல், செயல்பாடுகளை அவதானித்தல், ஆய்வறிக்கை தயாரித்தல் போன்ற செயற்பாடுகளுக்கு ஆலோசனைகளும் வழிகாட்டலும் வழங்கப்பட்டன. ஆயினும் குறித்த சில பாடசாலைகள் பூரண ஒத்துழைப்பை வழங்கவில்லை. ஆயினும் பெரும்பாலான பாடசாலை அதிபர்கள் ஆய்வு நிலை ஆசிரியர்கள் மகிழ்வோடு ஒத்துழைத்தனர்.

செயல்நிலை ஆய்வு முன்மொழிவு முன்வைப்பானது கடந்த 2025 நவம்பர் மாதம் முதல் வாரத்தில் வெற்றிகரமாக இந்த நிலையத்தில் நடத்தி முடிக்கப்பட்டது. அவை தொடர்பான குறை நிரப்பு வேலைத்திட்டங்கள் ஆய்வு நெறிமுறைகள் பற்றிய ஆலோசனைகளும் வழங்கப்பட்டதோடு தொடர்ச்சியான வழிப்படுத்தல்களும் இடம்பெற்றன.

இன்று ஐந்து மாதங்கள் கடந்து ஆய்வு வேலை திட்டம் முடிவடைந்து ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கும் மாநாடு நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ் வேலைத்திட்டத்தில் பல்வேறு சவால்களை சந்தித்தோம்.

இயற்கை அனர்த்தச் சூழல், பாடசாலை பரீட்சை சூழல் ,அதிபர், ஆசிரியர் சிலரது கவலையீன குறைபாடு ,செயற்பாடுகளை முன்னெடுக்காமல் கைவிடப்பட்டமை, புதிய கல்வி சீர்திருத்த செயலமர்வுகள் என கோடிட்டு காட்டக் கூடிய நிலைகள் இருந்தன. இவற்றையெல்லாம் கடந்து நாம் இன்று இப்பணியைஇறுதிக் கட்டத்திற்கு நகர்த்தியுள்ளோம்.

சவால்கள் இல்லாத வாழ்க்கையும் அவற்றை அர்த்த புஷ்டியுடன் எதிர்கொள்ள முடியாத செயற்பாடும் இல்லாதுவிடின் ஒரு மனிதனுடைய அர்த்த புஷ்டி உள்ள ஆளுமை வளர்ச்சியை சிதறடித்து விடும். எனவே மார்க்ஸ் எங்கள் கூறுவது போல் ,ஒன்றுக்கு ஒன்று முரணான கருத்துக்களை மோத விடுவதும் அதுபோல் செயல்பாடுகளை முன்னெடுப்பதும் உண்மையை கண்டறிவதற்கான மிகச் சிறந்த வழி எனலாம்.

இந்த வகையிலே செயல்நிலை ஆய்வு எமது கல்வி வலயத்தில் பின்வரும் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டது. கல்விப் புலப் பிரச்சினைகளை கண்டறிதல், நடைமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்துதல், நடைமுறையில் உள்ள செயற்பாடுகளை மேம்படுத்துதல். இந்தப் பின்புலத்தில் முன்னெடுக்கப்படும் ஆய்வுகளை நாம் மூன்று வகைக்குள் உட்படுத்துகின்றோம். விவரித்தலாய்வு , இணைப்பு தொடர்பான ஆய்வு ,தலையீட்டு ஆய்வு. இந்த மூன்றாவது ஆய்வு தான் செயற்பாடுகளை மேம்படுத்தும் முகமாக முன்னெடுக்கப்படுகின்றது. இதனை நாம் பரிசோதனை ஆய்வு ,செயல்நிலை ஆய்வு ,செயற்பாட்டாய்வு என்று அழைக்கின்றோம். மேலும் ஒரு பிரச்சினை தீர்க்க பல்வேறு சுழற்சி முறையை முன்னெடுப்பதால் இதனை சுருளி ஆய்வு என்றும் அழைக்கின்றோம்.

இந்தச் செயல்நிலை ஆய்வு மூன்று வகைப்படும் விஞ்ஞான ரீதியான செயல் நிலை ஆய்வு ,படைப்பாற்றல் செயல் நிலையை ஆய்வு ,செயல்முறை செயல் நிலை ஆய்வு.

இந்தப் பின்புலத்திலே செயல் நிலை ஆய்வின் நோக்கங்கள் நடைமுறையில் உள்ள செயற்பாடுகளை மேம்படுத்தவும் விளங்கிக் கொள்ளவும் நடைபெறுகின்ற சூழலில் மாற்றத்தை ஏற்படுத்தவும் அவசியமாகின்றது.

கல்வி புலன்களில் குறிப்பாக பாடசாலைகளில் பிராக்டிகல் அக்ஸன் ரிசர்ச் செயல்முறை செயல்நிலை ஆய்வு  முன்னெடுக்கப்படுகின்றது .இது மீண்டும் மீண்டும் சுருளி உருவான வட்டமாக செயல்படும் பிரதானமான திட்டமிடல் ,செயல்படுத்துதல் ,அவதானித்தல் ,பிரதிபலித்தல் என்ற நான்கு படிகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றது எனலாம்.

இதனால் தான் நாம் எதிர்பார்த்த விளைவு கிடைக்கப் பெறாவிட்டால் மீண்டும் அதே படிகளில் செயல்பாடுகளை முன்னெடுத்து தீர்க்கமான தீர்மானங்களை எட்டுவதன் மூலம் ஆரோக்கியமான முடிவுகளை பெறுகின்றோம் எனலாம்.

இங்கு ஆய்வாளரும் ஆய்வுக்கு உட்படுவோரும் நேரடியாக தொடர்பு பட்டியிருப்பர் .மேலும் பிரச்சினையை எதிர் நோக்கியவரே தீர்வை நோக்கி பயணிக்க ஆய்வு மேற்கொள்வார் .அவரே ஆய்வு முடிவுகளையும் கண்டறிவார். அமுல்படுத்துபவார். இதனால் இங்கு சுய செயற்பாடுகள் அமல்படுத்தப்படும் . மீளாய்வு செய்யப்படும். உண்மையான பிரச்சினைகள் மத்தியில் கவனம் செலுத்தப்படும். மேலும் இவ்வாய்வு எளிமையானது மீண்டும் மீண்டும் செய்யத்தக்கது. ஆசிரியரின் வாண்மை விருத்திக்கு உதவக்கூடியது. எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக தனிப்பட்ட அல்லது நிறுவன ரீதியில் அளவுவறிமுறை அல்லது பண்பறிமுறை அல்லது இரண்டு கலந்து முன்னெடுக்கக்கூடிய ஒரு ஆய்வு முயற்சி ஆக அமைகிறது. இங்கு மிகப் பிரதானமான வெற்றி என்பது பிரச்சினையை தீர்த்தல் ஆகும்.

இவ்வகையில் உண்மையில் நாம் சில பாடங்களை கற்றுக் கொள்கின்றோம். நாம் வாழும் சமூகத்தில் தமக்குரிய இடத்தை பெறுவதற்கு கல்வி அவசியமாகிறது. அது கற்பதற்கான விருப்பத்தையும் ஆர்வத்தையும் சம வாய்ப்பையும் கொடுத்தல் கல்வியின் மிக முக்கியமான பணி அது கற்கின்ற சமூகத்தை கட்டி எழுப்ப வேண்டும் என்றும் கற்றுக் கொண்டிருக்கின்ற சமூகத்தை உருவாக்க வேண்டும். ஒரு கல்வியில் பொக்கிஷம் என்பது மாணவனின் உள்ளத்துள் புதைந்து கிடக்கின்ற பரிவு ,செழுமை ,அன்பு , திறன், தாராளத்தன்மை இவற்றை வெளிக்கொணர வேண்டும். எதார்த்தத்தை புரிந்து கொள்ளவும் ,மரபுரிமைகளையும், பண்பாட்டையும், கலையையும் ,பிரபஞ்சத்தில் தான் வாழ்வதற்குரிய பயிற்சியையும் அதன் உண்மை தன்மைகளையும் புரிந்து கொள்ளவும் வேண்டும். எதைச் சிந்திப்பது என்பதை விட எவ்வாறு சிந்திப்பது என்பதை அவன் உணர்ந்து கொள்ள வேண்டும். அவன் ஆற்றல்களையும் ஆளுமைகளையும் விருத்தி செய்ய வேண்டும் .கல்வி என்பது அதை பெறுபவரின் நடத்தையை மாற்றும் செயல்முறை நியமங்களையும் விழுமியங்களையும் இளைய தலைமுறையினருக்கு அள்ளிக் கொடுப்பதே கல்வி. சமூக விடுதலைக்கான அதிசக்தி வாய்ந்த ஆயுதம் கல்வியாகும். எனவே நாம் ஒரு மேம்பட்ட கல்வி முறை ஒன்றின் ஊடாக மாத்திரமே நாட்டின் அமைதி ,சமூக நல்லிணக்கம், நல்லாட்சி, பொருளாதார செழிப்பு மற்றும் நிலைபேருடன் கூடிய அபிவிருத்தியை உறுதி செய்ய முடியும். எனவேதான் இலங்கை கல்வி நிலை மாற்றமானது சமத்துவம், உட்படுத்தல், சமாதானம் ,செழிப்பு, நீதி நிலைப்பாடுகளு டன் கூடிய தன்மை மற்றும் உலகளாவிய குடியுரிமைக்காக பாடுபடும் நெறிமுறை ,சமூக பொறுப்புணர்வு ,புதுமையான மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்பவர்களை வளர்ப்பதற்காக கல்வியை நிலை மாற்றம் செய்தல் முக்கியமாகிறது .இந்த பின்புலத்தில் தான் ஆசிரியர்களும் ,மாணவர்களும் ஆய்வியல் ரீதியில் சிந்திப்பவர்களாகவும், செயற்படுபவர்களாகவும், உண்மையானதும், வலிமையானதும் நிலை பேருடையதுமான தீர்மானங்களை எடுக்க கூடியவர்களாக அவர்களை இற்றைப்படுத்தி உருவாக்குவதும் நோக்கமாக கொண்டுள்ளது. இந்தப் பின்புலத்தில் தான் கலைத்திட்ட அபிவிருத்தி, மனிதவள அபிவிருத்தி, உட்கட்டமைப்பு, கணிப்பீடு, மற்றும் மதிப்பீடு விழிப்புணர்வு மற்றும் மேம்பாடு என்ற மறு சீர்அமைப்புக்கான அடித்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இறுதியாக மாற்றம் என்ற வார்த்தையை தவிர உலகில் அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கின்றன .பூலோக ஒழுங்கு நிரலுக்கு ஏற்ப நாமும் நமது சமூகத்தை தயார் படுத்த வேண்டியது காலத்தின் கடமை எனவே சர்வதேச போக்குகளுக்கு ஈடு  கொடுக்கக்கூடிய முறையில் தொழிற்திறன் மிக்க ,விஞ்ஞானபூர்வமாக சிந்திக்கக்கூடிய, நிதானமாக பகுத்தாய்ந்து தீர்க்கமான தீர்வுகளை எட்டக்கூடிய ,21ஆம் நூற்றாண்டு சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய முறைமையில் இலங்கை அரசாங்கம் கல்வியை ஒரு அடிப்படை உரிமையாகவும் ,தேசிய அபிவிருத்தியின் ஒரு மூலக்கல்லாகவும் அங்கீகரித்திருக்கிறது .உணர்வு ரீதியாக அறிவு உள்ள, சமூக பொறுப்புள்ள, சமூக மற்றும் பண்பாட்டு விழிப்புணர்வு ,உள்ள அரசியல், கல்வி அறிவு பெற்ற ,விமர்சன ரீதியாக சிந்திக்கும் திறன் கொண்ட ஒரு பிரசையின் விருத்தியானது அவசியமாகிறது. . இலங்கை மக்கள் ஆகிய நாம் எமது மக்களுக்கும் , நாட்டுக்கும் வகை கூறும்உரிமையும், கடமையும் உடையவர் என்ற அடிப்படையில் எமது மாணவரதும், எமது சமூகத்தினதும், எமது நாட்டினதும் நலன் கருதி ஆய்வியல் ரீதியில் சிந்திப்போம். தீர்மானங்களை தீர்க்கமாக எடுப்போம்