மண்ணுக்காகவும்-மக்களுக்காகவும் அவயங்களை தியாகம் செய்தவர்கள் முன்னாள் போராளிகள்

த.சுபேசன்

மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தமது உடல் அவயங்களை தியாகம் செய்தவர்கள் முன்னாள் போராளிகள் என பிரதேசசபை முன்னாள் உறுப்பினரும்,தாயக உறவுகளுக்கு கை கொடுக்கும் இலக்கியா தென்றல் அமைப்பின் கிளிநொச்சி இணைப்பாளருமான தயானந்தன் ஜெயச்சித்ரா தெரிவித்துள்ளார்.
தாயக உறவுகளுக்கு கை கொடுக்கும் இலக்கியா தென்றல் அமைப்பு ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்படி தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளில் பெரும்பாலானவர்கள் முன்னாள் போராளிகளாகக் காணப்படுகின்றனர்.
இவர்கள் கடந்த காலங்களில் மண்ணுக்காகவும்,மக்களுக்காகவும் தமது அவயங்களை தியாகம் செய்தவர்கள்.
முன்னாள் போராளிகள் செய்த தியாகம் என்றுமே மறக்க முடியாதது.
அதேபோல் உரிமைக்கான போராட்டத்தில் அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளை இழந்துள்ளோம்.
இவர்கள் மண்ணுக்காக செய்த தியாகத்தை மீட்டிப் பார்க்கும் போது நெஞ்சம் கனக்கின்றது.

மண்ணுக்காக போராடி இன்று அந்த வடுக்களோடு வாழும் முன்னாள் போராளிகளுக்கு தாயக உறவுகளுக்கு கை கொடுக்கும் இலக்கியா தென்றல் அமைப்பின் ஊடாக உதவி செய்யவும்-அதே நேரம் அவர்களை சந்திக்கவும் சந்தர்ப்பம் கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கின்றது.

இலக்கியா தென்றல் அமைப்பின் நிறுவுனர் தனுஸ் மாஸ்ரர் முன்னாள் போராளிகளுடைய துயரங்களை நன்கு அறிந்தவர்.அதனால் தான் தனது சகோதரர்களான இலக்கியா(பெண் போராளி) மற்றும் தென்றல் (வான் போராளி) ஆகியோருடைய நினைவாக முன்னாள் போராளிகள்,மாவீரர் குடும்பங்களுக்கு உதவிகளை மேற்கொண்டு வருகின்றார்.
இலக்கியா தென்றல் அமைப்பு தமிழர் தாயகத்தை கடந்து தென்பகுதியிலும் தமது உதவித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.என மேலும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.