மட்டக்களப்பில் நடைபெற்ற விபுலானந்த அடிகளாரின் துறவற நூற்றாண்டு ஆய்வரங்கம்

மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திய முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழாவின் ஒருபகுதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை மண்டபத்தில், கிழக்கிலங்கையில் சுவாமி விபுலாநந்தர் என்ற தலைப்பில் ஆய்வரங்கம் நடைபெற்றது.

இரண்டு அமர்வுகளாக நடைபெற்ற இந்த ஆய்வரங்கின் முதல் அமர்வுக்கு பேராதனைப் பல்கலைக்கழகம் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் வ. மகேஸ்வரன் தலைமை தாங்கினார்.

இவ் அமர்வில், மட்டக்களப்பு அடையாளத்தை உருவாக்கியவராக
சுவாமி விபுலாநந்தர் என்ற தலைப்பில்,  தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித் துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி க. இரகுபரன், மட்டக்களப்பு வாவியும் பாடும் மீன்களும்  என்ற தலைப்பில் கிழக்குப் பல்கலைக்கழக புவியியல் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் இராஜரெட்ணம் கிருபராஜா, சுவாமி விபுலாநந்தருக்கும் கிழக்கிலங்கைப் புலமையாளர்களுக்கும் இடையிலான ஊடாட்டம் எனும் தலைப்பில், கிழக்குப் பல்கலைக்கழக இந்துநாகரிகத் துறை பேராசிரியர் நா.வாமன், கிழக்கிலங்கைத் தமிழகமும் முஸ்லிம்களும்: சுவாமி விபுலாநந்தரை முன்னிறுத்திய ஓர் உசாவல் என்ற தலைப்பில், தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித் துறை பேராசிரியர் றமீஸ் அப்துல்லா, கிழக்கிலங்கையில் சுவாமி விபுலாநந்தர் நிர்மாணித்து நிருவகித்த பாடசாலைகள் என்ற தலைப்பில், கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் கற்கைகள் துறை ஓய்வுநிலை சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி றூபி வலன்ரினா பிரான்சிஸ்  ஆகியோர் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித் துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி க. இரகுபரன் தலைமைதாங்கிய இரண்டாவது அமர்வில், கண்ணகி கலாசாரமும் சுவாமி விபுலாநந்தரும் என்ற தலைப்பில் கிழக்குப் பல்கலைக்கழக  தமிழ் கற்கைகள் துறை  விரிவுரையாளர் கலாநிதி த. மேகராசா, சுவாமி விபுலாநந்தர் தொடர்பில் கிழக்கிலங்கையில் எழுந்த ஆய்வுகள் எனும் தலைப்பில், கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் கற்கைகள் துறை பேராசிரியர் சின்னத்தம்பி சந்திரசேகரம், கிழக்கிலங்கைக் கவிஞர்கள் பார்வையில் சுவாமி விபுலாநந்தர் என்ற தலைப்பில் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் கற்கைகள் துறை விரிவுரையாளர்  பாஸ்கரன் சுமன்,
கிழக்கிலங்கையின் சமகால சமூக அரசியல் பின்னணியில் சுவாமி விபுலாநந்தர் என்ற தலைப்பில் கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி கௌரி லக்சுமிகாந்தன் ஆகியோர் கட்டுரைகளைச் சமர்ப்பித்திருந்தனர்.

இவ் ஆய்வரங்கின் முடிவில், இவ் ஆய்வரங்குக்கெனச் சமர்ப்பிக்கப்பட்ட 11ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய தொகுதியும் வெளியிட்டுவைக்கப்பட்டது.

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளார் துறவறம் பூண்டதன் நூற்றாண்டு நிறைவையொட்டி  இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நாடு பூராகவும் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.