பொலன்னறுவை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட உலர் உணவுப் பொருட்கள்

(ஏறாவூர் நிருபர்-நாஸர்)

அண்மைக்கால இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கென மட்டக்களப்பு – ஏறாவூர்ப் பிரசேத்தில் ஜம்இய்யது உலமாசபையின் தலைமையில் சேகரிக்கப்பட்ட உலருணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பொலன்னறுவை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.

சுமார் மூன்று கோடி ரூபா பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் ஐந்து லொறிகளில் கொண்டு செல்லப்பட்டு பொலன்னறுவை மாவட்டத்தில் தம்பாளை, கல்லால்ல மற்றும் சுவசெத் கம போன்ற பிரதேசங்களிலும் கண்டி மாவட்டத்தில் கம்பொல ,கெலிஓயா , தெல்தோட்டை மற்றும் யட்டிநுவர ஆகிய பிரதேசங்களிலுமுள்ள முஸ்லிம் , சிங்கள மற்றும் தமிழ்க் குடும்பங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

ஜம்இய்யது உலமாசபையின் தலைவர் ஹாபிஸ் மௌலவி சாஜித் ஹுஸைன்லத்தீப் (பாகவி) தலைமையில் நகர சபைத்தவிசாளர் எம்எஸ். நழீம் மற்றும் சம்மேளனத் தலைவர் எம்எம். சாலி உள்ளிட்ட பலர் நேரடியாகச் சென்று பொருட்பொதிகளை பகிர்ந்தளித்தனர்.

“ஏறாவூர் மக்களின் நேசக்கரம்” என்ற மகுடத்தின்கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்த பொருட் சேகரிப்பு பணிகளுக்கு முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் , நகர சபை மற்றும் சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.

அரிசி , பால் மா , சீனி , பருப்பு , பிஸ்கட் , புதிய ஆடைகள் , மீன்டின் , தண்ணீர்ப் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்கள் பொதி செய்யப்பட்டு வழங்கப்பட்டன.