எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் முதியோர் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
மட்டக்களப்பு திராய்மடுவில் அமைந்துள்ள புதிய மாவட்ட செயலகத்தில் நேற்று (12) திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது தலைமையில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வானது மாவட்ட
செயலக உதவி மாவட்ட செயலாளர் கு.பிரணவன் அவர்களது ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது கடந்த 2024 ஆம் ஆண்டு சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு மாவட்ட செயலகத்தினால் நடாத்தப்பட்ட கவிதை, கட்டுரை, அனுபவப்பகிர்வு, சிறுகதை ஆகிய ஆக்கத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், 2025 ஆம் ஆண்டு சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு முதியோர்களுக்கான தேசிய செயலகத்தினால் நடாத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற சிறந்த சுய தொழில் பயனாளி, சிறந்த முதியோர் சங்கம், சிறந்த முதியோர் சம்மேளனம் மற்றும் சிறந்த முதியோர் பகல் நேர பராமரிப்பு நிலையம் ஆகியவற்றிற்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டதுடன், இதன் போது முதியோர் சங்கங்களினால் ஆடல், பாடல் மற்றும் தாளலயம் என்பன அரங்கேற்றப்பட்டது.
இந்நிகழ்விற்கு விசேட அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஶ்ரீகாந்த் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்ததுடன், குறித்த நிகழ்வில் மாவட்ட செயலக சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி.எஸ்.கோணேஸ்வரன், முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி.ஏ.துஷியந்தி, உதவி மாவட்ட செயலாளர் பிரிவிற்கான பதவி நிலை உதவியாளர் கே.மொகமட் றிழா உள்ளிட்ட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.


