கிழக்கு மாகாண காணிப் பாதுகாப்புக் குழுக் கூட்டம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

கிழக்கு மாகாணத்தில் அரச காணிகளைப் பாதுகாத்தல் மற்றும் காணி நிர்வாகத்தை வலுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாண காணிப் பாதுகாப்புக் குழுவின் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜி. பிரணவன் அவர்களின் ஏற்பாட்டில் இன்று (26) பழைய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்திலுள்ள அரச காணிகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள், காணி நிர்வாகத்தில் காணப்படும் சவால்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன், அரச காணிகள் தொடர்பான தரவுகளைச் சேகரித்தல், ஆவணப்படுத்தல் மற்றும் முறையாகப் பேணிப் பாதுகாத்தல், காணி நிர்வாக நடவடிக்கைகளை உரிய சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக முன்னெடுத்தல் ஆகிய விடயங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டது.

மேலும், காணி தொடர்பான சட்டங்கள், சட்டவிரோத காணி அபகரிப்புகளைத் தடுப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் மற்றும் அவற்றுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட இக்குழுவானது, கிழக்கு மாகாணத்தின் காணிப் பாதுகாப்பு தொடர்பான விடயங்களை ஆராய்ந்து, அதற்கான பரிந்துரைகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவுள்ளது.

இந்நிகழ்வில் வளவாளராகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவர் சேனக பள்ளியகுருகே, காணிப் பாதுகாப்பு மற்றும் சட்ட நடைமுறைகள் தொடர்பான தெளிவூட்டல்களை வழங்கினார்.

இக்கூட்டத்தில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட காணிப் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினர்கள், கிழக்கு மாகாண காணி ஆணையாளர் திருமதி ரவீந்திரன், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு அரச துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.