முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது 81ஆவது பிறந்தநாளை இன்று (18) கொண்டாடுகிறார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வீரகெட்டிய கிராமத்தில் 1945 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் திகதி பிறந்த அவர், இலங்கையின் அரசியல் களத்தில் பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தியதுடன், நாட்டின் 5ஆவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக 2005 முதல் 2015 ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்தார்.
இவரது ஆட்சிக்காலத்தில், மூன்று தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டு யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டமை அவரது அரசியல் வாழ்க்கையின் மிக முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
தொழில் ரீதியில் சட்டத்தரணியான மஹிந்த ராஜபக்ஷ, முதன் முதலில் 1970 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2004 ஏப்ரல் 6 முதல் 2005 ஜனாதிபதி தேர்தல் வெற்றி வரை பிரதமராகப் பதவியேற்றிருந்த அவர், 2005 நவம்பர் 19 ஆம் திகதி நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டார்.
தொடர்ந்து 2010 ஜனவரி 27 அன்று இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும், 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மைத்ரிபால சிறிசேனவிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஜனவரி 9 ஆம் திகதி அந்தப் பதவியிலிருந்து விலகினார். அதன் பின்னர் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும், 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரை பிரதமராகவும் அவர் செயற்பட்டிருந்தார்.
இந்தநிலையில், இன்று தனது 81ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் தனது தந்தைக்கு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரது மூத்த மகனும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் மிகவும் உணர்வுபூர்வமான பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியொன்றைப் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
“அன்புள்ள தந்தையே, இந்த ஆண்டு உங்களது பிறந்தநாளில் உங்களது அருகில் இருந்து வாழ்த்த இயலாமல், குடும்பத்தினரிடமிருந்தும் அன்பானவர்களிடமிருந்தும் பிரிந்து இந்த கடினமான காலத்தைக் கடக்க நேரிட்டாலும், சிறைச்சாலையின் சுவர்களுக்கு அப்பால் உங்களுக்காக எனக்குள்ள அன்பும் மரியாதையும் எல்லையற்றது என்பதைப் பதிவிடுகிறேன்.
வாழ்க்கையில் நாம் ஒருபோதும் எதிர்பாராத சவால்களை எதிர்கொண்ட சந்தர்ப்பங்களில் நமக்கு அரணாக இருந்தது நமது பெற்றோரின் அன்பும், முன்னுதாரணமும், வாழ்க்கைப் பாடங்களுமே ஆகும்.
தந்தையே, தலைமைத்துவம் என்பது பதவியை வகிப்பது மட்டும் அல்ல என்பதை உங்கள் வாழ்க்கையின் மூலம் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தீர்கள். பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது, சவால்களை எதிர்கொண்டு தளராது நிற்பது, தான் நம்பும் விடயத்திற்காக துணிச்சலுடன் நிற்பது என்பதையெல்லாம் உங்கள் வாழ்விலிருந்து நாங்கள் கற்றுக்கொண்டோம். நமது நாட்டின் வரலாற்றில் மிகவும் இருண்ட காலப்பகுதியில், தாய்நாட்டின் ஆயிரக்கணக்கான தாய்மார்கள், தந்தையர்கள் மற்றும் அன்பான பிள்ளைகளுக்காக யாருக்கும் பயப்படாமல் சமாதானத்தை நிலைநாட்டிய துணிச்சலான தலைவர் நீங்கள்தான்.
இன்று நான் எதிர்கொள்ளும் இந்தக் கடினமான காலத்தில், நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்த பொறுமை, தைரியம் மற்றும் தளராத உறுதியின் மதிப்பை ஆழமாகப் புரிந்து வருகிறேன். ஒரு தந்தையின் இதயம் எத்தகைய பலத்துடன் இருக்க வேண்டும் என்பதை உங்களிடமிருந்தே நான் கற்றுக்கொண்டேன். எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு உண்மைக்காகப் போராடும் நானும் ஒரு தந்தைதான்.
இன்று உங்கள் அருகில் இருக்க எனக்கு முடியாவிட்டாலும், எனது பிள்ளைகள் இன்று உங்களுக்கு அருகில் இருப்பார்கள். என்னைப்போல் அவர்களும் உங்களைத் தழுவிக்கொள்வார்கள்.
அரசியல் சூழலில் நீங்கள் எதிர்கொண்ட கடினமான சூழ்நிலைகள் மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியில், மஹிந்த ராஜபக்ஷ என்ற இந்த மண்ணில் கால் பதித்த எனது தந்தைக்கு, உங்களது அன்பான மூத்த புதல்வனான நான் நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும், மனவலிமையையும் இந்நாளில் கிடைக்க பிரார்த்திக்கிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என் அன்புத் தந்தையே!” என்று அந்தப் பதிவில் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.


