வெறுமனே ஊழல், ஊழல் என்று பேசுவதால் பயனில்லை

நூருல் ஹுதா உமர்

கடந்த அரசாங்கங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும், அவற்றின் ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் பயன்களை இன்றும் மக்கள் அனுபவித்து வருகின்றனர் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஸ்ரப் தாஹீர் தெரிவித்தார்.

இன்று (17) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட வீதிகள் காரணமாக இன்று மக்கள் இலகுவானதும் வசதியானதுமான பயணங்களை மேற்கொள்ள முடிகின்றது. கடந்த அரசாங்கங்கள் முன்னெடுத்த வீதி அபிவிருத்திப் பணிகளின் பயனாகவே நீண்ட தூரப் பயணங்களையும் குறுகிய நேரத்தில் மேற்கொள்ளக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

நாங்கள் இரவு 11 மணிக்குப் பயணத்தை ஆரம்பித்து அதிகாலை 5 மணியளவில் இலக்கைச் சென்றடைகின்றோம். அதேபோன்று, பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பிக்கும் பயணம் இரவு 10 மணியளவில் கல்முனையைச் சென்றடைய உதவுகின்றது. இதன் மூலம் எமது பிரதேசங்களுக்குத் திரும்பி குடும்பத்தினருடனும் மக்களுடனும் இணைந்து எமது பணிகளைத் தொடரக்கூடிய நிலை உருவாகியுள்ளது. இத்தகைய போக்குவரத்து வசதிகளுக்கு கடந்த கால அரசாங்கங்களின் அபிவிருத்திப் பணிகளே அடிப்படையாக அமைந்துள்ளன.

நாட்டில் நீண்டகாலமாக இடம்பெற்ற யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் அமைதியான சூழல் உருவாகியுள்ள போதிலும், அந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுபான்மை சமூகங்கள் எதிர்பார்க்கும் தீர்வுகள் இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வெறுமனே ‘ஊழல், ஊழல்’ என்று பேசிக்கொண்டிருப்பதால் மாத்திரம் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகளை மறைத்துவிட முடியாது. அக்காலப்பகுதியில் பாடசாலைக் கட்டட நிர்மாணங்கள், விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஆனால், தற்போதைய அரசாங்கம் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை அறிவித்த போதிலும், அவற்றுக்கான நடைமுறைப் பணிகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார்.

கடந்த வருடம் நிந்தவூர் கலாசார மண்டப நிர்மாணத்திற்காக அரசாங்கம் 300 மில்லியன் ரூபாவை (30 கோடி ரூபா) ஒதுக்கியிருந்தது. ஆனால், இன்றுவரை அந்த நிதியில் ஒரு பகுதியைக்கூட செலவிட்டு நிர்மாணப் பணிகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது. திட்டமிட்ட காலப்பகுதியில் பணிகளை நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாமை கவலையளிக்கின்றது.

அதேபோன்று, தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 6,700 மில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்தித் திட்டம் தொடர்பிலும் அவர் சந்தேகம் வெளியிட்டார். இந்தத் திட்டம் 2028ஆம் ஆண்டுக்குள் நிறைவு பெறும் என்ற நம்பிக்கை தமக்கில்லை எனக் குறிப்பிட்ட அவர், நிதி ஒதுக்கீடுகள் மீண்டும் மீண்டும் அறிவிக்கப்படுகின்ற போதிலும், நடைமுறைச் செயற்பாடுகள் இடம்பெறாமல் நிதி பயன்படுத்தப்படாத நிலையில் தேங்கிக் கிடப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

எனவே, வெறுமனே நிதி ஒதுக்கீடுகளை அறிவிப்பதற்குப் பதிலாக, ஒதுக்கப்பட்ட நிதியை உரிய காலத்தில் பயன்படுத்தி அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் அஸ்ரப் தாஹீர் எம்.பி. தனது பாராளுமன்ற உரையில் வலியுறுத்தினார்.