தற்போதைய நிலையில் தமிழ்த் தேசியம் பேசும் பல அரசியல்வாதிகள் அண்ணன் சிவாஜிலிங்கத்தின் வழிமுறைகளைக் கற்றுக்கொள்ள வேண்டி இருக்கின்றது…

அண்ணன் சிவாஜிலிங்கம் போல் அஞ்சாமல் தமிழ்த் தேசியத்திற்காக உழைக்க தற்காலத்தில் பல அரசில்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டும். அண்ணனின் மறைவு அவரைப் பின்பற்றும் எம் போன்ற வளர்ந்துவரும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பாகும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தெரிவித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவருமான எம்.கே.சிவாஜிங்கம் அவர்களின் மறைவையொட்டி வெளியிட்ட அஞ்சலி அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

அண்ணன் சிவாஜிலிங்கம் அவர்கள் போராட்டத்திலும் சரி அரசியலிலும் சரி எமக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். எங்கள் தலைவரின் கனவைப் பின்பற்றி வந்த நாங்கள் தற்காலத்தில் சிவாஜி அண்ணனின் விட்டுக்கொடுப்பில்லாத கொள்கையைப் பின்பற்றி அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம். இவரது மறைவு அவரைப் பின்பற்றும் எம்மைப் போன்ற வளர்ந்துவரும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பாகும்.

இவரது ஆத்மா சாந்தியடைய ஜனநாயகப் போராளிகள் கட்சி சார்பில் எங்களது கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அவரது எண்ணத்திலும் சரி, மேடைப்பேச்சுகளிலும் சரி தமிழீழம் என்ற வார்த்தையை எதற்கும் எவருக்கும் அஞ்சாமல் உச்சிரித்துக் கொண்டிருப்பவர். அவருடைய பேச்சுகள் செய்கைகளைப் பார்க்கும் போது எங்களுக்கெல்லாம் ஒரு உற்சாகம் பிறக்கும். தற்போதைய நிலையில் தமிழ்த் தேசியம் பேசும் பல அரசியல்வாதிகள் இவரது வழிமுறைகளைக் கற்றுக்கொள்ள வேண்டி இருக்கின்றது என்று தெரிவித்தார்.