(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்திற்கு அமைவாக, சாய்ந்தமருது கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட தேசிய மனநல வாரம் – 2026 நிகழ்ச்சித் திட்டத்தின் செயற்பாடுகள், அடைவுகள், விழிப்புணர்வு முயற்சிகள் மற்றும் மாணவர்களின் ஆக்கபூர்வமான பங்களிப்புகளை ஆவணப்படுத்தி வெளியிடப்பட்ட Special Commemorative Publication (சிறப்பு நினைவு மலர்), கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் வைத்து கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் அவர்களிடம் (06) உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர் கே.எல். அப்துல் ஜெளபர், ஆசிரிய ஆலோசகர் உ. ஷஹதூனல் ஷபீல் மற்றும் ஆலோசனை மற்றும் வழிகாட்டல் பொறுப்பாசிரியர் எம்.எஸ். ஷிப்லி ஷம்சுத்தீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
குறிப்பாக, இச்சிறப்பு நினைவு மலரானது பாடசாலையின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல் பொறுப்பாசிரியர் எம்.எஸ். ஷிப்லி ஷம்சுத்தீன் அவர்களினால் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு, தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய மனநல வாரத்தின் நோக்கங்கள், நிகழ்ச்சிகளின் முன்னெடுப்புகள், மாணவர்களின் படைப்பாக்கங்கள், கல்வி நிர்வாகிகளின் வாழ்த்துரைகள், வளவாளர்களின் கருத்துரைகள் மற்றும் நிகழ்வுகளின் புகைப்படப் பதிவுகள் எனப் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி இந்நினைவு மலர் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நினைவு மலரைப் பெற்றுக்கொண்ட வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்கள், மாணவர்களின் உளநல மேம்பாட்டை முன்னிறுத்தி இத்தகைய ஆக்கபூர்வமான கல்விசார் முயற்சிகளை முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தைப் பாராட்டியதுடன், பாடசாலையின் இம்முயற்சிக்கும் தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
இச்சிறப்பான வெளியீட்டின் மூலம், தேசிய மனநல வாரம் – 2026 இன் செயற்பாடுகள் வெறுமனே ஒரு நிகழ்ச்சித் தொடராக மட்டுமன்றி, எதிர்காலப் பாடசாலைச் செயற்பாடுகளுக்கு வழிகாட்டும் பெறுமதிமிக்க ஆவணமாகவும் நிலைபெறுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


