தென்மராட்சி ஊடக மையம்” சம்பிரதாயபூர்வமாக இன்று(07) திறந்து வைக்கப்பட்டது.
அதற்கான நிகழ்வுகள், யாழ்ப்பாணம் தென்மராட்சி மீசாலை மேற்கில் அமைந்துள்ள தென்மராட்சி ஊடக மையத்தில் இடம்பெற்றன.
மீசாலை கரும்புமாவடி கந்தன் ஆலயத்திலிருந்து விருந்தினர்கள் தென்மராட்சி ஊடக மையம் வரை வரவேற்று அழைத்து வரப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மங்கள விளக்கேற்றலோடு ஊடக மையத்தின் பெயர் பலகை விருந்தினர்களால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
தமிழ் மொழி வாழ்த்தோடு ஆரம்பித்த நிகழ்வில், தென்மராட்சி ஊடக மையத்தின் உப தலைவர் க.கருணாகரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தென்மராட்சி ஊடக மையத்தின் தலைவர் க.ரஜனிகாந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், மூத்த ஊடகவியலாளரும் தினகரன் மற்றும் டெய்லி நியூஸ் பத்திரிகையின் யாழ் மாவட்ட விசேட செய்தியாளருமான ந.பரமேஸ்வரன், மூத்த ஊடகவியாளர் நா.தங்கவேல் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் விருந்தினர்கள் கெளரவிக்கப்பட்டதோடு ஊடகத்துறையின் தற்காலப் போக்கு தொடர்பாக விருந்தினர்கள் உரையாற்றினர்.
தென்மராட்சி ஊடக மையத்தின் செயலாளர் சி.ஜனகனின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.









