எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
முதற்கட்டமாக 10,000 பனம் விதைகள் நடப்பட்டன; 20,000 விதைகள் நடுகை செய்யத் திட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கற்பானை கிராமத்தில் யானை – மனித மோதலைக் குறைக்கும் நோக்கில் 20,000 பனம் விதைகளை நடுகை செய்யும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் முதற்கட்டமாக 10,000 பனம் விதைகள் நேற்று வியாழக்கிழமை (05) கற்பானை பிரதேசத்தில் நடுகை செய்யப்பட்டன.
மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட செயலக ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரி வ. ஜீவானந்தன், பிரதேச செயலகக் கணக்காளர், பிரதேச செயலக உயர் அதிகாரிகள், மாவட்ட ஊடகப் பிரிவு உத்தியோகத்தர்கள், மாவட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து கற்பானை பிரதேசத்தில் பனம் விதைகளை நடுகை செய்தனர்.
இச்செயற்றிட்டத்திற்காக யாழ்ப்பாணத்திலிருந்து தரமான 20,000 பனம் விதைகள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அவற்றில் 10,000 விதைகள் முதற்கட்டமாக நடுகை செய்யப்பட்டுள்ளன. ஏனைய விதைகளையும் திட்டமிட்ட வகையில் நடுகை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் அனுசரணையுடன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக, மாவட்ட செயலக ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மக்கள் நலச் செயற்பாடுகளை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் மாவட்ட ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்து இக்களப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன்,
இதன்போது கற்பானை பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் பனம் விதைகள் நடுகைத் திட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் நேரடியாகக் கள ஆய்வு செய்து செய்தி அறிக்கையிட்டதுடன், நடுகைச் செயற்பாட்டிலும் பங்கேற்றனர்.
யானை – மனித மோதல் அதிகரித்து வரும் பிரதேசங்களில் இத்தகைய சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூகப் பங்களிப்புடனான திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முக்கியத்துவம் பெறுகின்றது.


