எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தடுப்பதற்கும், அவசர நிலைமைகளை எதிர்கொள்வதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்குமான மாவட்ட மட்ட அனர்த்த முன்னாயத்தக் குழுக் கூட்டம் (05.11.2026) பிற்பகல் 2.30 மணியளவில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டம், அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் மாவட்டப் பிரதிப் பணிப்பாளர் A.S.M. ஸியாத் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில், வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழையை முன்னிட்டு மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள தயார்படுத்தல்கள், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் எதிர்நோக்கப்பட்ட சவால்கள் மற்றும் அவற்றுக்கான சாத்தியமான தீர்வுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. மேலும், பிரதேச மட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அனர்த்தத் தணிப்புத் திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
குறிப்பாக:
· மழைநீர் வடிகாலமைப்பைச் சீரமைத்தல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளைக் குறைத்தல்,
· நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப் பாதைகளின் தற்போதைய நிலைமைகளைக் கண்காணித்தல்,
· வீதிப் போக்குவரத்துத் தடைகளை அகற்றி சீரான போக்குவரத்தை உறுதி செய்தல்,
· அவசரகாலப் பதிலளிப்பு மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல்
போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளின் பங்களிப்புடன் ஆராயப்பட்டன.
இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள், முப்படை அதிகாரிகள், மாவட்டத்தின் முக்கிய அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களின் பிரதிநிதிகள், அத்துடன் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பருவப்பெயர்ச்சி மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களின் தாக்கங்களைக் குறைத்து, மக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பதற்காக அனைத்து அரச நிறுவனங்களும் ஒருங்கிணைந்து பொறுப்புடன் செயற்பட வேண்டுமென இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


