சண்முகம் தவசீலன்
2026.11.05
முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்துதொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போன மீனவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்
முல்லைத்தீவு மாவட்டத்தின் அம்பலவன் பொக்கணை பிரதேசத்திலிருந்து கடந்த 26.10.2026 அன்று கடலுக்குச் சென்று காணாமல் போன மூன்று மீனவர்கள் தொடர்பாக தற்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், குறித்த மீனவர்கள் கடல் நீரோட்டம் மற்றும் பலத்த காற்றினால் அடித்துச் செல்லப்பட்டு ஆழ்கடல் பகுதிக்குச் சென்றுள்ளதாகவும், அங்கு ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீன்பிடிப் படகுகளுடன் இணைந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
கிடைத்துள்ள தகவலின்படி, குறித்த மூன்று மீனவர்களில் ஒருவர் மீன்பிடிப் படகில் இருப்பதாகவும், ஏனைய இருவரும் மற்றைய மீன்பிடிப் படகுகளில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இத்தகவல்கள் இதுவரையில் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் பல நாட்கள் கடலில் தங்கியிருந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பின்னரே கரை திரும்புவதால், குறித்த படகுகள் கரையை வந்தடைந்த பின்னரே மீனவர்களின் இருப்பிடம் மற்றும் பாதுகாப்பு நிலைமையை உறுதிப்படுத்த முடியும்.
மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொண்டு இத்தகவல்களை உறுதிப்படுத்தும் நோக்கில், முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மற்றும் மாவட்ட செயலகம் ஆகியன இலங்கை கடற்படையினருக்கு இவ்விடயம் தொடர்பாக அறிவித்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து மேலதிக நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன.


