புதுப்பிக்கத்தக்க மின்சக்தி உற்பத்தி இலக்குகளை அடைவதில் பாரிய சவால்கள்

புதுப்பிக்கத்தக்க மின்சக்தி உற்பத்தி இலக்குகளை அடைவதில் பெரும் சவால்களும் சந்தேகங்களும் நிலவுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். மின்சார உற்பத்தி முறைமைகள், மின்கட்டணத் திருத்தங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களின் பயன்பாடு தொடர்பில் வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலகவிடம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சிறு மின் உற்பத்தியாளர்கள் புறக்கணிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்தியாளர்களுக்கு மின்சார உற்பத்திக்கான அனுமதிப் பத்திரங்கள் தாராளமாக வழங்கப்பட்டுள்ள நிலையில், சாதாரண வீட்டு மட்டத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சிறு உற்பத்தியாளர்கள் அனுமதி வழங்கப்படாமல் புறக்கணிக்கப்படுவதாக சாணக்கியன் சாடினார். கடந்த ஆண்டில் பதிவு செய்தவர்களுக்கும் இதுவரை அனுமதி தாமதிக்கப்பட்டு வருவதாகவும், வரவு–செலவுத் திட்டத்தின் ஊடாக அறிவிக்கப்பட்ட புதிய கட்டமைப்புத் திட்டம் இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

கொள்கை மாற்றங்களும் முதலீட்டாளர் பாதிப்பும்
புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசேட கொடுப்பனவுகள் மற்றும் சலுகைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை இத்துறை மீதான ஈர்ப்பைக் கணிசமாகக் குறைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், பகல் நேரத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவுக்கு அமையவே கட்டணம் செலுத்தப்படும் என்ற புதிய நடைமுறை, உற்பத்தியாளர்களின் வருவாயைப் பாதிப்பதுடன் முதலீட்டை மீளப்பெறும் காலத்தையும் நீடிக்கச் செய்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.