Uber நிறுவனத்தின் பெயரில் போலி மின்னஞ்சல்களை அனுப்பி, பொதுமக்களின் வங்கி அட்டைத் தகவல்களைத் திருடும் மோசடி குறித்து Cybercrimepolice.ch எச்சரித்துள்ளது.
“நடவடிக்கை தேவை” என்ற தலைப்பில் வரும் மின்னஞ்சல்கள், பணம் செலுத்தும் விவரங்களைச் சரிபார்க்க அல்லது புதுப்பிக்குமாறு கோருகின்றன. அதிலுள்ள இணைப்பை அழுத்துவோர், Uber கணக்குப் பக்கத்தைப் போல வடிவமைக்கப்பட்ட போலி இணையத்தளத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
அங்கு தனிப்பட்ட தகவல்கள், அட்டை விவரங்கள் மற்றும் OTP பாதுகாப்புக் குறியீடு கேட்கப்படுகின்றன. இந்தக் குறியீட்டை உள்ளிடுவதன் மூலம், மோசடியாளர்கள் மேற்கொள்ளும் அனுமதியற்ற பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் வழங்கப்படும் அபாயம் உள்ளது.
சந்தேகத்துக்குரிய மின்னஞ்சல் இணைப்புகளை அழுத்த வேண்டாம் என்றும், சந்தேகம் இருந்தால் Uber நிறுவனத்தை அதிகாரப்பூர்வ வழியில் நேரடியாகத் தொடர்புகொள்ளுமாறும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஏற்கெனவே தகவல்களை வழங்கியவர்கள் உடனடியாக வங்கியைத் தொடர்புகொண்டு சம்பந்தப்பட்ட அட்டையை முடக்குவதுடன், உள்ளூர் காவல்துறையில் புகார் அளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


