அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் அமைந்துள்ள பனங்காடு பட்டிநகர் கண்ணகி அம்மன் ஆலயம் கிழக்கிலங்கையின் பழமையான பத்தினி வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
பனை மரங்கள் சூழ்ந்திருந்ததால் பனங்காடு எனவும், பண்டைய நாகர் குடியிருப்பு என்பதால் பட்டிநகர் எனவும் இவ்விடம் பெயர் பெற்றது.
பட்டி மேடு என்றும் கூறுவர். இப் பழம் பெரும் ஆலயம் மனோரம்மியமான சூழலில் அமைந்துள்ளது. வயற்பிரதேசத்தின் மத்தியில் மரச்சோலைக்குள் இவ் ஆலயம் அமைந்துள்ளது. நிறைய வேம்பு மரங்கள் வன்னி மதுரை முதிரை ஆல் போன்ற மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
பனங்காட்டில் பாசுபதீஸ்வரர் சிவாலயம் சோழர் காலத்தில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகவும், சில ஆதாரங்களில் கி.பி 1-2ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனவும் கூறப்படுகிறது. இங்குள்ள 1300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுக்கள் இதன் தொன்மையை பறைசாற்றுகின்றன.
பனங்காட்டின் மேற்கு பிரதேசத்தில் பட்டிநகர் கண்ணகி கோயில் கொண்டு எழுந்தருளி அருள் பாலித்து கொண்டிருக்கிறாள்.
அங்கு வெள்ளி தினங்கள் மற்றும் குளிர்த்தி காலங்களில் நிறைய பக்தர்கள் பொங்கல் பொங்கி அம்மனுக்கு படைத்து வழிபடுவதுண்டு.
சிலப்பதிகார நாயகி கண்ணகி மதுரையை எரித்த பின் இலங்கைக்கு வந்து 20 இடங்களில் தங்கியதாக கூறப்படுகிறது. அவற்றில் பனங்காடும் ஒன்று. கஜபாகு மன்னன் காலத்தில் பத்தினி வழிபாடு இலங்கைக்கு வந்தது. வணிகக் கப்பலில் வந்த மூன்று அம்மன்களில் ஒருவரே இங்கு தங்கியதாக செவிவழிக் கதை உண்டு.
இங்கு கருவறையில் கண்ணகி அம்மன் நாகமங்கலை வடிவில் அருள்பாலிக்கிறார்.
ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் நடைபெறும் குளிர்த்தி பொங்கல் விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இவ்விழாவின் போது சடங்கு, கூத்து, மடை பரவுதல் போன்ற மரபுவழி நிகழ்வுகள் இடம்பெறும்.
தமிழ் – சிங்கள மக்கள் இணைந்து வழிபடும் சமய நல்லிணக்கத்தின் அடையாளமாகவும் இவ்வாலயம் திகழ்கிறது.
வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா.
ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் & சிரேஸ்ட ஊடகவியலாளர்
காரைதீவு


