திட்ட முகாமைத்துவம் தொடர்பான திறன் மேம்பாட்டு செயலமர்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

திட்ட முகாமைத்துவம் தொடர்பான திறன் மேம்பாட்டு செயலமர்வு, மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், உதவி மாவட்ட செயலாளர் ஜி. பிரணவன் அவர்களின் மேற்பார்வையில், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி அருணாளினி சந்திரசேகரம் ஒருங்கிணைப்பில், பழைய மாவட்ட செயலகத்தில் இன்று (08) இடம்பெற்றது.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான செயற்திட்டத்திற்கு அமைவாக, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இச்செயலமர்வு நடைபெற்றது.

மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வெளிக்கள உதவியாளர்கள் மற்றும் உளவள உதவியாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.

கள உத்தியோகத்தர்களின் திறன்களை மேம்படுத்தி, அடிமட்ட மக்களுக்கு அரச சேவைகளைத் துரிதமாக வழங்குதல், பெண்களுக்கான சுயதொழில் மற்றும் வாழ்வாதாரத் திட்டங்களை மேம்படுத்துதல், நிதி முகாமைத்துவம் மற்றும் உள்ளூர் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இச்செயலமர்வில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் சமூக அபிவிருத்தி நிபுணர் ஏ. சுவர்ணலிங்கம் அவர்கள் வளவாளராகக் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினார்.
மாவட்டத்திற்கு 5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான விற்பனை நிலையங்கள் உருவாக்கப்படவுள்ளதுடன், தெரிவுசெய்யப்பட்ட 50 பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.