(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கலாசார அலுவல்கள் அமைச்சினால் வருடந்தோறும் நடாத்தப்பட்டு வரும் பிரதீபா – 2026 மாகாண மட்டப் போட்டியில், சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய மாணவர்கள்
தேசிய மட்டத்திற்கு முன்னேறி சாதனை நிலைநாட்டியுள்ளனர்.
இம்முறை செங்கலடி மத்திய கல்லூரியில் இடம்பெற்ற இந்த போட்டிகளில் சுமார் 16 க்கு மேற்பட்ட மத்திய நிலையங்கள் பங்குபற்றியிருந்தன. அதில் முஸ்லிம் பிரிவில் சுமார் 06 மத்திய நிலையங்கள் கலந்து கொண்டன.
இந்த கிழக்கு மாகாண மட்டப் போட்டிகளில் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் கலந்து கொண்ட கனிஷ்ட றபான் குழு நடனம், சிரேஷ்ட றபான் நடனம் தனி, கனிஷ்ட கிராமியப் பாடல் குழு, வளவாளர் தனி புத்தாக்க நடனப் போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி மொத்தமாக 04 முதலிடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்டு சாய்ந்தமருதுக்கு பெருமை சேர்க்கும் வகையில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
இது சாய்ந்தமருது வரலாற்றில் எழுதப்பட வேண்டிய பாரியதொரு வெற்றியாகும். ஏனெனில், சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையம் திறந்து குறுகிய காலப்பகுதியில் இவ்வெற்றிச் சாதனையை நிலை நாட்டியுள்ளனர் குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியில் கலந்து கொண்ட கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் இவ்வெற்றிக்கு பின்புலமாய் இருந்து செயற்பட்ட சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஸ்ஸான் +(நளீமி), கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் எம். ஐ. ஜாபிர், கலாசார மத்திய நிலையத்தில் இம் மாணவர்களைப் பயிற்றுவித்த வளவாளரான எம்.ஐ.எம். அமீர் (ஆசிரியர்), ஆகியோருக்கும் இக்கலாசார மத்திய நிலையத்தின் மூலம் கலந்து கொண்ட ஏனைய போட்டிகளான சித்திரம் கனிஷ்ட, தனி நிகழ்ச்சியில் முதலாமிடத்தையும், மெரிட் இரண்டு மாணவர்களுக்கும் மற்றும் திறந்த பிரிவு சித்திரப் போட்டியில் மூன்றாமிடத்தையும் சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலய மாணவர்கள் பெற்றுக் கொண்டதோடு, அல்-ஜலால் வித்தியாலய அதிபர் ஹிர்பகான் மற்றும் கலாசார மத்திய நிலையத்தில் இம் மாணவர்களைப் பயிற்றுவித்த வளவாளரான எம்.எம்.எம். தாதீஸ் (ஆசிரியர்),
உட்பட பங்கு பற்றி, வெற்றிக்காகப் பாடுபட்ட அனைவருக்கும் கலாசார மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ. பி. நௌஷாத் வாழ்த்துக்களோடு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.


