எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
இலங்கைத் தொழில் வழிகாட்டல் நிலையத்தில் கணினி பயிற்சி நெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களினால் புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (07) வழங்கி வைக்கப்பட்டது.
மாவட்ட செயலக மனிதவளப் பிரிவு உத்தியோகத்தர்களினால் பயிற்றுவிக்கப்பட்ட 5ஆவது மற்றும் 6ஆவது பிரிவு சேர்ந்த மாணவர்களுக்கே இச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஜி. பிரணவன், மனிதவள அபிவிருத்திப் பிரிவின் இணைப்பாளர் வி. மைக்கல் கொலின், மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.ஆர்.எம். பாயிஸ் மற்றும் ஏ. கருணாகரன், மாணவர்களின் பெற்றோர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் க.பொ.த உயர்தரத்தை நிறைவு செய்த மாணவர்களின் கணினி அறிவை மேம்படுத்துவதற்காக மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் மற்றும் மாவட்ட செயலகம் ஆகியவை இணைந்து இப்பயிற்சி நெறியைத் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது கற்கை நெறியின் பயிற்றுவிப்பாளர்களுக்கு அரசாங்க அதிபர் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


