தெற்கில் ரோஹண விஜேவீர உள்ளிட்டவர்களுக்கு சிலைகள் அமைத்து, அரச அனுசரணையுடனும் அரச தலைவரின் பங்களிப்புடனும் நிகழ்வுகளை நடத்த முடியுமென்றால், அகிம்சை வழியில் உயிரைத் தியாகம் செய்த தியாகதீபம் திலீபனுக்கும் அமைதியான போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கும் தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்துவதில் என்ன தவறு இருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நல்லூரில் இடம்பெற்ற சம்பவத்திற்கு கடும் கண்டனம்
யாழ்ப்பாணம் நல்லூரில் இடம்பெற்ற சிலை அகற்றப்பட்ட சம்பவத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த அவர், அந்த தவறான செயலைச் செய்துவிட்டு, அதற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை எனக் கூறுவது பொறுப்பற்ற செயலாகும் என்றும் விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து இடம்பெறும் இவ்வாறான நகர்வுகள் தமிழ் மக்கள் மத்தியில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்கக்கூடியதாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொலிஸாரால் அகற்றப்பட்ட சிலை: தவறான பிரச்சாரங்களுக்கு மறுப்பு
குறித்த சிலை ஸ்ரீலங்கா பொலிஸாரினாலேயே அகற்றப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை எனக் குறிப்பிட்ட சாணக்கியன், மாநகரசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படாத நிலையில், அரசாங்கமும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான நிர்வாகமும் மேற்கொண்ட நடவடிக்கையை திசைதிருப்பச் சிலர் பொய் குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருவதாகக் குற்றம்சாட்டினார்.
“சிலையை அகற்றிவிட்டு, ‘சிலையை அகற்றியது நாங்கள்தான்’ என்று கூறுவதற்குக்கூட முதுகெலும்பில்லாதவர்களாக சிலர் இருக்கின்றார்கள்” என அவர் காரசாரமாக விமர்சித்தார்.
முகநூல் பதிவுகளும் பேரினவாத வன்மமும்
தனது முகநூல் பக்கத்தில் தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திப் பதிவிட்ட போது, அதற்கு பேரினவாத சிங்களத் தரப்பினரிடமிருந்து வன்மத்தையும் வன்முறையையும் தூண்டும் வகையிலான கருத்துக்கள் வந்துள்ளதாகத் தெரிவித்த அவர், நாட்டில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இன்னும் ஒரு அங்குலம் கூட நாம் நெருங்கவில்லை என்பதையே இது தெளிவுபடுத்துகிறது என்றார்.
தமிழ் மக்கள் ஓரணியில் திரள அழைப்பு
தமிழினத்தின் விடுதலைக்காக நடத்தப்பட்ட போராட்டத்துடன் தொடர்புடையவர்களை பயங்கரவாதிகள் எனப் பலரும் சித்தரிக்க முயன்றாலும், தியாகதீபம் திலீபனுக்கும் அமைதியான போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவது தமிழ் மக்களின் உரிமை என அவர் வலியுறுத்தினார்.
எனவே, இடம்பெற்ற இந்த மோசமான சம்பவத்திற்கும் சிலையை அகற்றிய நடவடிக்கைக்கும் எதிராக ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஓரணியாக நின்று தங்களது கண்டனங்களைப் பதிவு செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளார்.


